சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 2 வயதுக் குழந்தை மரணம்
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை என்ற இடத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 2 வயதுக் குழந்தை சிறிது நேரத்தில் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணி நடந்தது. இதில் 70 லட்சம் பேருக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
படப்பையிலும் சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடந்தன. அங்கு பெரியார்நகர் பகுதியில் உள்ள பால்வாடியில் அமைந்த முகாமிற்கு அப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்திருந்து தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினர்.
அதே பெரியார்நகர் பகுதி 5-வது தெருவை சேர்ந்தவர் அருள், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஜோஸ்வா (2) என்ற மகன் இருந்தான். இக்குழந்தைக்கும் நேற்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனே குழந்தையை படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் குழந்தையை பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், துமக்கள் சொட்டு மருந்து வழங்கப்பட்ட தங்கள் குழந்தைகளை தூக்கிக் ண்டு படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். படப்பை பகுதியில் இருந்து 100-க்கும் அதிகமான குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் அந்த குழந்தைகளை சோதனை செய்து பார்த்து விட்டு நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னரே குழந்தைகளை வீட்டிற்கு நிம்மதியாக அழைத்து சென்றனர்.
சம்பவம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆசிஷ்சாட்டர்ஜி கூறுகையில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட மற்ற குழந்தைகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்ததாக கருத வாய்ப்பில்லை. காரணம் என்ன? என்பதை கண்டறிய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications