தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேரின் மரண தண்டனை நிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மபுரி அருகே இலக்கியம்பட்டியில், கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.
இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கி சேலம் முதலாவது கூடுதல் செஷனஸ் நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி அன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதை எதிர்த்து அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மூன்று பேரையும் தூக்கிலிட நாள் குறித்து சேலம் கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்ததால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மூன்று பேரும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று நீதிபதிகள், சுதர்ஷன் ரெட்டி, நிஜ்ஜார் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications