திருப்பூரில் உள்ள 739 சாயப் பட்டறைகளையும் மூடும் உத்தரவுக்குத் தடை இல்லை-உயர்நீதிமன்றம்
சென்னை: திருப்பூரில் உள்ள 739 சாயப் பட்டறைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று மறுத்து விட்டது.
திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீரால் நொய்யல் ஆறு மாசுப்பட்டுப் போய் விட்டது. இதனால் குடிநீர், விவசாயம் உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இதையடுத்து நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2005ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சாயக் கழிவு நீரை ஆற்றில் கலந்து விடும் சாயப் பட்டறைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நடவடிக்கைளை அறிவித்து அதை அமல்படுத்துமாறு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் வாரியத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதை சாயப் பட்டறை நிறுவனங்கள் முறையாக அமல்படுத்தவில்லை. பல நிறுவனங்களை இதைக் கண்டு கொள்ளவே இல்லை.
இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை, திருப்பூரில் உள்ள அனைத்து 739 சாயப் பட்டறைகளையும் இழுத்து மூட வேண்டும். அங்கு மின் இணைப்புகளை உடனடியாக மின்வாரியம் துண்டிக்க வேண்டும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சாயப்பட்டறை உரிமையாளர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அவசர வழக்காகவும் விசாரிக்கக் கோரியிருந்தனர். மேலும் தமிழக அரசும், தொழிலாளர்கள் நலன் கருதி உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தது.
இதுகுறித்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இதை அவசர வழக்காக விசாரிக்க பெஞ்ச் மறுத்து விட்டது. மேலும், அனைவரும் தங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சாயப் பட்டறைகளை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications