தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இலங்கை கடற்படை. இதில் சிக்கி இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் முடிவே இல்லாமல் இலங்கைப் படையின் அரக்கத்தனம் நடந்து வருகிறது.
சமீபத்தில் அடுத்தடுத்து 2 மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சட்டசபைத் தேர்தல் வரும் சமயம் என்பதால் அரசியல் கட்சிகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன.
இதையடுத்து மத்திய அரசு என்றும் இல்லாத அதிசயமாக துரித கதியில், இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம், எதிர்ப்பு, கண்டிப்பு என்று இறங்கியது,.
மேலும், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.
அதன்படி சென்னை வழியாக நேற்று கொழும்பு புறப்பட்டுச் சென்றார் நிரூபமா ராவ். இன்று ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதித்தார். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் நிரூபமா வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த இலங்கைத் தரப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
ராஜபக்சேவுடனான சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது குறித்தும், தொடர் தாக்குதல்கள் குறித்தும் இந்திய அரசின் கவலையைத் தெரிவித்தார்.
இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன்தான் தாங்கள் நடத்துவதாக அப்போது இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நட்பின் அடிப்படையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நடந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராயப்படும் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் இலங்கை தெரிவித்தது. மேலும், எந்தச் சூழ்நிலையிலும் படை பலத்தைப் பிரயோகிப்பதில்லை என்றும் இரு தரப்பும் உறுதி பூண்டுள்ளன.
2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வருவது குறைந்துள்ளதாகவும் பேச்சுவார்த்தையின்போது சுட்டிக் காட்டப்பட்டது. இருப்பிநும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு மீனவர்களின் பாதுகாப்பையும், நலனையும் மேலும் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது என்றும் இரு தரப்பும் முடிவெடுத்துள்ளன.
விரைவில் இரு நாட்டு கூட்டு மீனவர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். இரு நாட்டு மீனவர்களும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதில் விவாதிக்கப்படும். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடன்பாடுகளையும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசின் செயலாளர் எஸ்.கே.பாண்டியன் கலந்து கொண்டார் என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அதிகாரி ஒருவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக இதுவரை தமிழகஅரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா, இந்தியத் தூதர் அசோக் காந்தா, இலங்கை தூதர் பிரசாத் காரியவம்சம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சென்னையில் மகாபோதி சங்கத்தின் மீது நடந்த தாக்குதல் குறித்தும் நிரூபமாவிடம் ராஜபக்சே விவாதித்தார். மேலும், இந்தியாவின் நிதியுதவியுடன் நடந்து வரும் திட்டங்கள் குறித்தும் ராஜபக்சேவிடம் நிரூபமா விவாதித்தார்.












Click it and Unblock the Notifications