ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு-ராசா, 10 அதிகாரிகள் மீது தவறு உள்ளது-சிவராஜ் பாட்டீல் கமிட்டி அறிக்கை

தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக கபில் சிபல் பொறுப்பேற்றதும், ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீலைக் கொண்ட ஒரு நபர் கமிட்டியை நியமித்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்து ஆராய இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டது.
2001ம் ஆண்டு முதல் 2009 வரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், தொலைத் தொடர்பு கொள்கைகள் ஆகியவற்றை கமிட்டி ஆராயும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தனது ஆய்வை மேற்கொண்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல், இன்று தனது 150 பக்க அறிக்கையை கபில் சிபலிடம் ஒப்படைத்தார். அறிக்கையில், 3000க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் அவர் இணைத்துள்ளார்.
அதில்,
அமைச்சர் ராசாவின் நடைமுறைத் தவறுகளால்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடக்க காரணமாகி விட்டது. மேலும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் முன்னாள் தனி செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரின் தவறுகளும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த 7 பேரின் பெயர்களையும் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சிவராஜ் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது ஆய்வுக்கான வரைமுறைகளுக்குட்பட்டு நான் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். நடைமுறைத் தவறுகள், குளறுபடிகள் இருந்ததா என்பதே ஆய்வின் முக்கிய நோக்கம். அது எட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.
2001ம் ஆண்டு நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை இக்கமிட்டி ஆராய்ந்துள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கே முன்னுரி்மை என்ற நடைமுறை தவறானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதியே இல்லாதவர்களும் உரிமம் பெற்றிருப்பதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறை தொடங்கியது. அப்போது நடந்தது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சி. அதையும் கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அதிகாரிகள் சிலர் விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சுக்கு பிரணாப் முகர்ஜி அழைப்பு:
இதற்கிடையே, பிப்ரவரி 8ம் தேதி மதிய உணவு விருந்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை வைக்கப் போகிறார்.
இதுகுறித்து நாளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூடி முடிவெடுக்கவுள்ளன.












Click it and Unblock the Notifications