திமுகவுடன் மீண்டும் பாமக பேச்சுவார்த்தை-25 தொகுதிகள் மட்டுமே தருவதாக திமுக திட்டவட்டம்

டெல்லியில் முதல்வர் கருணாநிதி பேசியதை மறுக்கும் வகையில், நாங்கள் கூட்டணி சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி திமுக தரப்பை செம டென்ஷனாக்கினார் ராமதாஸ். இதையடுத்து நாங்களும் முடிவெடுக்கவில்லை. ராமதாஸே இல்லை என்று கூறி விட்ட பின்னர் கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது என்று கருணாநிதியும் கூறி விட்டார்.
இதனால் அரண்டு போன ராமதாஸ், நேற்று நான் அப்படியெல்லாம் சொல்லலையே என்று இறங்கி வந்தார். இந்த பின்னணியில் மீண்டும் திமுக, பாமக இடையிலான தொடர்புகள் தொடங்கியுள்ளன. தமிழக அரசின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்வது தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற கட்சிகள் கூட்டத்தில் ஜி.கே.மணி பங்கேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.மணி, பின்னர் முதல்வர் கருணாநிதியையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும், பாமக தரப்பில் 35 தொகுதிகள் தேவை என்று மணி கேட்டதாகவும், 25தான் தர முடியும் என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்று பாமக 31 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை 50 தொகுதிகளை முதலில் கேட்டிருந்தது. இந்த நிலையில்தான் முதல்வர் கருணாநிதி படு சமயோஜிதமாக செயல்பட்டு பாமகவை குழப்பி விட்டார். இதையடுத்து தற்போது 25 தொகுதிகள்தான், அதாவது பாமக கேட்டதை விட பாதி தொகுதிகளைத்தான் தர முடியும் என திமுக தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.
டாக்டர் ராமதாஸை சந்தித்து கருணாநிதி, ஸ்டாலின் கூறியதை ஜி.கே.மணி சொல்லி, அதுகுறித்து ராமதாஸ் மற்றவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை பாமக வட்டாரம் எடுக்கும் என்று தெரிகிறது.
லஞ்சம் கொடுத்தா வாங்கிக்குங்க-ராமதாஸ்
இதற்கிடையே, வாக்களிக்க லஞ்சமாக பணம் கொடுத்தால் தாராளமாக வாங்கிக் கொண்டு பாமகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
இடைப்பாடி தொகுதியில் நடந்த பாமக பயிற்சி முகாமில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
இடைப்பாடி தொகுதி நமது கோட்டை. அருகில் உள்ள சங்ககிரி தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகள், பா.ம.க.,வுக்கு, கிடைக்கும் என்கின்றனர். நமது கோட்டையான இடைப்பாடியில், அதை விட அதிக அளவில் ஓட்டுகள் பெற வேண்டும். இத்தொகுதியில், 2.10 லட்சம் ஓட்டுகள் உள்ளன.
இத்தொகுதியில் விரைவில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு, 50 ஆயிரம் பேரை, நீங்கள் அழைத்து வரவேண்டும். அவ்வாறு அழைத்து வந்தால், நாம் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இத்தொகுதி, பா.ம.க. வின் கோட்டை என்பது, மற்ற கட்சிகளுக்கு தெரிந்து விடும்.
தேர்தல் நேரத்தில், ஓட்டுகளுக்கு, 100, 200 ரூபாய் மட்டுமின்றி, 1,000 ரூபாய் வரை கொடுப்பர். இந்த பணம் கொள்ளை, ஊழல், லஞ்சமாக பெற்றது தான். இந்த பணத்தையும் வாங்கிக் கொண்டு நீங்கள் பா.ம.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications