சட்டசபைத் தேர்தலை புறக்கணிப்போம்-மீனவர்கள் போர்க்கொடி
ராமநாதபுரம்: கடலில் அட்டை மீன் பிடிப்பதற்கு விதித்துள்ள தடையை மத்திய அரசு நீக்காவிடில் வரும் சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து கடலோர செயல்பாட்டு அமைப்பாளர் ஜேசுரத்தினம், ராமநாதபுரம் மாவட்ட மீன் பிடித் தொழிலாளர் சங்கத் தலைவர் பால்சாமி, சங்கு மற்றும் கடல்பாசி தொழிலாளர் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜப்பர் ஆகியோர் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்ட கடல் பகுதிகளில் அட்டை மீன்கள் தான் அதிகம் உள்ளன. இதனை நம்பி ஒன்றரை லட்சம் மீனவர்கள் உள்ளனர்.
ஆனால், கடலில் அட்டை மீன்களின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்காமல் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2001 -ல் இருந்து அட்டை மீன் பிடிப்பதற்கு தடை விதித்ததுள்ளது
கடலில் வலைசும் போது அட்டை மீன்களை தவிர மற்ற மீன்களை மட்டும் தேடி பிடிக்க முடியாது. அட்டை மீன்கள் பிடிக்க நாங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், மீனவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படு வருகின்றன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய சுற்றுச் சூழல் வன அமைச்சகம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவ மக்கள் சார்பில் பிப்ரவரி 7 ம் தேதி அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும், மார்ச் 5 ம் தேதி உண்ணாவிரதமும் நடைபெற உள்ளது.
அரசு இதற்கும் செவிசாய்க்கா விட்டால் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.












Click it and Unblock the Notifications