பல்வாவுடன் சேர்த்து ராசாவிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி!

கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கடந்த 3ம் தேதி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.
5 நாள் விசாரணை முடிவடைந்ததையடுத்து 8ம் தேதி மூவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ராசாவிடம் மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவரை மேலும் 5 நாட்கள் தங்கள் காவலில் அனுப்புமாறு சிபிஐ கோரியது. அதே நேரத்தில் பெகுரியா, சந்தோலியா ஆகிய இருவரிடமும் விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறியதையடுத்து அவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் ராசாவிடம் மேலும் 2 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து ராசா மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.
இன்றுடன் அந்த 2 நாள் அவகாசம் முடிவடைந்தது. இதையடுத்து ராசா இன்று பிற்பகலில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருடன், நேற்று முன் தினம் மும்பையில் கைது செய்யப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ராசாவையும் பல்வாயையும் ஒன்றாக வைத்து விசாரிக்க வேண்டியிருப்பதால் ராசாவின் சிபிஐ காவலை மேலும் 4 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரினார்.
இதற்கு ராசாவின் வழக்கறிஞர் எதி்ர்ப்புத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒவ்வொருவரையும் கைது செய்யும்போதும் ராசாவையும் விசாரிக்க வேண்டியிருக்குமா என்று சிபிஐக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து இதில் தீர்ப்பு வழங்குவதாக அறிவி்த்தார்.
பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, ராசாவை மேலும் 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதே போல பல்வாவையும் 4 நாட்கள் சிபிஐ காவல்லி வைத்து விசாரிக்க அனுமதி தந்தார்.
இதையடுத்து இருவரும் மீண்டும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களிடம் வரும் 14ம் தேதி வரை விசாரணை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications