தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்க வேண்டும்-தேர்தல் ஆணையர்

Subscribe to Oneindia Tamil

CEC Qureshi
சென்னை: ஓட்டு போட்டு விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல தேர்தலின் முந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஒய்.எஸ். குரேஷி கூறினார்.

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பான 7வது தேசிய கருத்தரங்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய குரேஷி கூறுகையில்,

இந்தியாவில் 99 சதவீத அரசயில்வாதிகளை நம்ப முடியவில்லை என்று சொல்கிறார்கள். தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கொலை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு 5 வருட தண்டனை கிடைக்கிறது. ஆனால் தேர்தலில் குற்றங்களில் ஈடுபடுபவர்களை சிறு வழக்குகள் என்று கூறி விட்டு விடுகிறார்கள்.

கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் 20 வருடம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். தேர்தலில் நிற்பது தங்களது அடிப்படை உரிமை என்கிறார்கள் அவர்கள். அது எப்படி அடிப்படை உரிமையாகும்?.

இந்தியாவில் தேர்தல் தான் ஊழலில் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது. குற்றவாளிகளின் பணம், ஊழல் தேர்தலில் அடிப்படையாக உள்ளது. தேர்தலை பொறுத்தவரை பணம் மிகப் பெரிய சக்தியாக விளங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிக்கு ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யலாம் என்பது விதி . ஆனால் அதை விட 100 மடங்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.

இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் என்ன செய்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். பிகார் தேர்தலில் வேட்பாளரின் செலவு வங்கி கணக்கு மூலம் கண்காணிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு நள்ளிரவில் பணம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கட்சிக்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கிறார்கள். ஒருவர் கொடுப்பதை விட மற்றொருவர் அதிகமாக கொடுக்கிறார்.

தேர்தலுக்காக மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது. தேர்தலுக்கு பிரசாரம் ஓய்ந்த பிறகு கடைசி 48 மணி நேரத்தில் வீடு வீடாக சென்று பணம், பொருட்கள், மது பாட்டில்கள் கொடுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும்.

ஓட்டு போட்டு விட்டு வந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல தேர்தலின் முந்தைய கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் வரவு-செலவுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த பிகாரில் நடைமுறைப்படுத்திய திட்டத்தை வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் அமல்படுத்துவோம்.

சட்டசபை தொகுதிக்கு ரூ. 10 லட்சம், நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யலாம் என்பதை சட்டசபை தொகுதிக்கு ரூ. 16 லட்சமாகவும், நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ. 40 லட்சமாகவும் அதிகரிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த முடியுமா? என்பதும் தெரியவில்லை என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் 99 சதவீதம் வரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. வாக்களிக்கும்போது தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் அளித்ததற்கான அடையாளச் சீட்டுகள் வழங்குவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராகி வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் அவற்றை பயன்படுத்த முடியுமா என்பதை கூற முடியாது. அதுபற்றி பேராசிரியர் இந்திரகாசன் கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் குரேஷியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக சட்டசபை தேர்தல் பணிகள், பள்ளித் தேர்வுகள் நடக்கும் தேதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

முன்னதாக நேற்றிரவு சென்னை வந்த குரேஷி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது வழங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே போல், வேட்பாளர்கள், தேர்தல் வரவு, செலவு பரிவர்த்தனைக்காக வங்கிகளில், புதிதாக தனி கணக்கு துவங்க வேண்டும் என்ற திட்டமும் இத் தேர்தலில் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். அந்த வங்கிக் கணக்கு மூலம்தான் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து இடங்களிலும் துணை ராணுவ படையினரை மட்டுமே பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும் என்றார்.

எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, அதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது. தேர்தல் தேதியை முடிவு செய்த பின் 2 மணி நேரத்தில் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.

இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும்.

தமிழ்நாட்டில் 4 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. விடுபட்டவர்கள் தேர்தல் நடைபெறும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பள்ளிகள், சமூகக்கூடங்கள், பொது நிறுவன அலுவலகங்கள் உள்பட 29,000 இடங்களில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது

இப்போகு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களைப் பரிசோதிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடந்து வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனைப் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை தலைமை தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+