எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட...ஜெ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சிந்தனையோடு வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அதற்கு நேர்மாறாக எங்கும் குடும்பம், எதிலும் குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரது தன்னலத்தால், தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்நோக்கிச் செல்கிறது.
விண்ணைத் தொடும் விலைவாசி, கடும் மின்வெட்டு, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, மருத்துவ வசதியின்மை, சாலை வசதியின்மை என தமிழக மக்கள் பல்வேறு அவதிகளுக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, பதுக்கல், கொலை, கொள்ளை என அனைத்து விதமான சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. அண்டை மாநிலங்களுடனான அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளிலும் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களால் மீன்பிடித் தொழிலையே விட்டுவிடும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது.
2ஜி இமாலய ஊழல் மூலம் உலக அரங்கில் இந்தியாவுக்கு அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு அவப்பெயர் வாங்கித் தந்துள்ளார். சினிமாத்துறை, கட்டுமானத்துறை என ஒவ்வொரு துறையிலும் கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
இந்த ஆட்சியை வரும் தேர்தல் மூலம் அகற்றும் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த வேளையில் எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களைக் காப்பாற்றும் பணிகளில் ஈடுபடுவதில் தான் எனக்கு மகிழ்ச்சி.
பொதுவாக எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை. இருப்பினும், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பும் அதிமுகவினரை ஏழை, எளிய மக்களுக்கு துணிமணிகள் வழங்குதல், மருத்துவ சேவையாற்றுதல், அன்னதானம், ரத்ததானம், போன்ற நற்காரியங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
குடும்ப ஆட்சியை அகற்றி, எம்ஜிஆரின் நல்லாட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திட எனது பிறந்த நாளன்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, அதை நிறைவேற்றிடும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். குடும்ப ஆட்சி அகற்றப்படும் நாளே தமிழக மக்களுக்கு நன்னாள் ஆகும். அதனால் அனைத்துக் கொண்டாட்டங்களையும் அப்போது வைத்துக் கொள்ளலாம் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications