Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வள்ளுவன், தொல்காப்பியன் என பாராட்டுவதை விட்டு வெற்றிக்கு உழையுங்கள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பரமேஸ்வரன், வள்ளுவன், தொல்காப்பியன் என்றெல்லாம் என்னைப் பாராட்டுவதை விரும்பவில்லை. தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுங்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழக உணவுத்துரை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனுக்கும், கோபாலகிருஷ்ணன் மகள் கானப்பிரியாவுக்கும் திருவண்ணாமலையில் திருமணம் நடந்தது. திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது...

நம்முடைய தலைவர்களும் கட்சித் தோழர்களும் தங்களுடைய வாழ்த்துரைகளை மிகச் சுருக்கமாக இங்கே ஆற்றியிருக்கின்றார்கள்.

அவர்களையெல்லாம் நான் பாராட்டுகிற அதே நேரத்தில் வாழ்த்திப் பேசியவர்களைப் பற்றி ஒன்று நான் குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் திருமணத்தில் நான் காணுகின்ற தலைவர்களெல்லாம் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலைப் பற்றி சிந்திக்கின்ற தலைவர்களாக இருப்பதைக் காணுகின்றேன். அந்தக் காரணத்தினால் நான் இங்கே வேண்டுகோள் விடுப்பது நலமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

நம்முடைய அருமை தம்பி தமிழகத்தினுடைய உணவு அமைச்சர் பேசும்போது மிகுந்த உருக்கத்தோடு உள்ளத்திலே ஓடுகின்ற அன்பை, உணர்ச்சிகளை எல்லாம் தாங்க முடியாமல் கண் கலங்க என்னையும் என் குடும்பத்தையும் ஏன் நம்முடைய குடும்பமாம் திராவிட இயக்கத்தையும் எண்ணியவாறு பல தகவல்களை இங்கே வெளியிட்டிருக்கின்றார்.

தமிழகத்திலே மாத்திரமல்ல, பொதுவாக நாட்டில் உணவுத் துறையை நடத்துவது சாதாரணமானதல்ல. தமிழகத்தினுடைய ஆட்சிப் பொறுப்பில் நான் அமர வைக்கப்பட்டபோது, உணவுத் துறையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று எண்ணியபோது துவக்கத்திலே கூட இந்தத் துறையை கவனிக்கக்கூடிய உருவம் படைத்தவராக இருந்த காரணத்தினால் இப்போதும் இருக்கின்ற காரணத்தால் நான் வேடிக்கையாக அடிக்கடி அவரை “தவிசுப் பிள்ளை"" “தவிசுப் பிள்ளை"" என்று சொல்லுவேன். நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடாதீர்கள்.

அப்படிப்பட்ட உணவுத் துறையிலே எல்லாவிதமான முயற்சிகளை செய்யக்கூடிய ஊக்கத்தோடு பணிகளை ஆற்றக்கூடிய நண்பர் என்று எல்லோரும் பாராட்டும் நேரத்தில் சரி இந்தத் தம்பியே அந்தத் துறையை கவனிக்கட்டும் என்று, அந்தத் துறையை தி.மு.கழக அரசு அவரிடத்திலே ஒப்படைத்து அது சீரும் சிறப்போடும் எந்த ஏழை மக்களுக்காக, எளிய மக்களுக் காக, அன்றாடம் காய்ச்சிகளுக்காக இந்த அரசு ஆக்கப் பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதியதோ, அந்தப் பணிகளை அட்டியின்றி செய்து முடிக்கின்ற அருமைத் தம்பியாக அருமை வேலு அவர்கள் இன்றைக்குத் திகழ்கிறார்கள்.

எ.வ.வேலு என்று தமிழகத்திலே உணவு அமைச்சரைத்தான் அவ்வளவு சிறப்போடும் செல்லமாகவும் அழைக்கக்கூடிய அளவிற்கு அவருடைய பெயர் இன்றைக்கு பட்டொளி வீசி பறக்கின்றது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. தற்போது நடைபெறும் தமிழகத்தினுடைய ஆட்சியில் என்ன சிறப்பு என்று யார் கேட்டாலும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார்கள்"" என்று சொல்கிறார்கள் என்றால், நான் இந்த ஆட்சிக்கு தலைவனாக இருந்தாலும் அதை தரக்கூடிய செயல்பாட்டை அதிலே எந்த விதமான குறைவும் ஏற்படாமல் பரிமாறித் தருகின்ற ஆற்றலும் செயல்பாடும் வேலு அவர்களுக்குத்தான் உரியது.

எனவே கிலோ அரிசி இதைப் பற்றி யாராவது பேசுவீர்களேயானால், அந்த பெருமையெல்லாம் என்னை சார்ந்தது என்று கருதுவீர்களேயானால், இவை அமைச்சரவையிலே இருக்கின்ற அருமைத் தம்பி வேலு அவர்களைத்தான் சாரும் என்று நான் திட்டவட்டமாக கூறுகின்றேன். இவ்வளவு அமைச்சர்கள் இருந்தும் வேலுவை பற்றி மட்டும் இவ்வாறு குறிப்பிடுகிறாரே என்று யாராவது கூறுவார்களேயானால் எல்லா அமைச்சர்களைப் பற்றியும் இப்படி குறிப்பிடுகின்ற காலம் வர வேண்டும், வேளை வர வேண்டும், எல்லா அமைச்சர்களும் அப்படி நான் சொல்லுகின்ற அந்த பொறுப்புள்ளவர்களாக அவர்களும் தங்களை அமைத் துக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை நான் சொல்கிறேன். இப்போது அமர்ந்திருக்கின்ற அமைச்சர்கள் மாத்திரமல்ல, ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரும்போதும் அப்பொழுதும் அமருகின்ற அமைச்சர்களும் இந்த ஆற்றலைப் பெற்றவர்களாக திகழ வேண்டும் என்பதுதான் என்னுடைய அளவற்ற ஆவலாகும்.

தம்பி வேலு அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். காலையிலே பத்திரிகைகளைப் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் வாழ்த்து என்ற பெயரால், வரவேற்பு என்ற பெயரால், தலைவர்களைப் பாராட்டுவது என்ற பெயரால், என்னென்னவோ விளம்பரங்களைச் செய்கிறார்கள். "ஆண்டவரே' என்கிறார்கள் "கடவுளே' என்கிறார்கள் "பரமேஸ்வரியே'' என்கிறார்கள் "எங்களைக் காக்க வந்த ஆண்டவனே'' என்றெல்லாம் கவிதைகளை இயற்றுகிறார்கள். இவைகளெல்லாம் பத்திரிகைகளிலே வருகிறது.

காலையிலே இன்றைக்கு நான் தங்கியிருந்த இடத்திற்கு தம்பி வேலு வந்தபோது ஒன்றைச் சொன்னேன் அப்போது சற்றுக் கடுமையாக அவரிடத்திலே கோபித்துக் கொண்டேன். "எல்லாம் சரி என்னை தந்தை பெரியாரின் தொண்டனே என்று வாழ்த்துங்கள் அண்ணாவின் தம்பியே என்று அழைத்து வாழ்த்துங்கள்.ஆனால், வள்ளுவரே என்றும், தொல்காப்பியனே என்று சொல்லி, என் மனதைப் புண்படுத்தாதீர்கள் என்று நான் அவரிடத்திலே சொன்னேன். அதைச் சொன்னேனா, இல்லையா என்பதை அவரிடத்திலே நீங்கள் கேட்டுப் பார்த்தால், சொல்வார்.

ஏனென்றால், ஒருவரைப் பெருமைப்படுத்துகிற அளவிற்கு என்மீது என்னதான் ஆசையிருந்தாலும், என்னதான் என்மீது அன்பு இருந்தாலும், என்னைப் பாராட்ட வேண்டுமென்று கருதினால். பெரியாரின் தொண்டன், அண்ணாவின் தம்பி, தொண்டர்களுக்குத் தோழன், ஏழைகளுக்குத் தோழன் என்று சொல்லுங்கள்.

ஆதிதிராவிடர்களுக்கு, அனாதை மக்களுக்கு, நோயுற்ற குழந்தைகளுக்கு இன்றைக்கு இந்த அரசு ஆற்றுகின்ற பணிகளையெல்லாம் ஒன்றுபடுத்தி, அந்த நிலையிலேயிருந்து புகழுங்கள். அதை விட்டு விட்டு, தொல்காப்பியரே, என்றும், வள்ளுவரே என்றெல்லாம் சொன்னால், அவர்களுடைய காலடிக்குக் கூட நான் சமம் அல்ல.

அவர்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தமானவன் அல்ல. எனவே, தயவு செய்து வேலு அவர்களுக்கு நான் காலையிலே சொன்ன கோபத்தோடு சொன்ன அந்த எச்சரிக்கையை நம்முடைய கழகத் தோழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திருமணத்திலே இதுதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு விடுக்கின்ற செய்தியாகும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

யுத்த களத்தில் நடக்கும் திருமணம்:

இத்திருமணத்தை முடித்துக் கொண்டு பிச்சாண்டி மகள் திவ்யா வேதநாயகம் திருமணத்திற்குச் சென்று அதை நடத்தி வைத்தார் கருணாநிதி. அங்கு அவர் பேசுகையில்,

ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் நடக்கும் யுத்தத்துக்கான களத்தில் நிற்கும் இந்த நேரத்தில் இந்த திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தை மணமக்களாலும் நம்மாலும் மறக்க முடியாது.

மணமக்களுக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் வெற்றிச் செல்வன் என்றும், பெண்ணாக இருந்தால் வெற்றிச் செல்வி என்றும் பெயர்சூட்டும் வகையில் மக்கள் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+