தொகுதிப் பங்கீடு: இன்றிரவு திமுக-காங்கிரஸ் குழுக்கள் பேசி முடிவு

அப்போது கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஐவர் குழுவோடு தமிழக பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தும் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார் என்று இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல் திட்டம், 80 சீட்கள் என்ற காங்கிரசின் விளையாட்டுக்கு திமுக தயாராக இல்லை. இதனால் திமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது கட்சியினருடன் மாற்றுத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்த, காங்கிரஸ் தரப்பு கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணியை உடைத்துக் கொள்வது நமக்கும் நல்லதல்ல என்பதே திமுகவின் நிலைமை என்றாலும் மாற்றுத் திட்டம் குறித்து அந்தக் கட்சி ஆலோசனை நடத்தியதே காங்கிரஸ் தரப்புக்கு அதிர்ச்சி தந்துவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இரு கட்சிகளின் நலம் விரும்பிகளும் தலையிட்டு இரு கட்சிகளின் தலைமைகளிடமும் பேச்சு நடத்தியதையடுத்து இரு தரப்பும் சில விஷயங்களில் விட்டுத் தரவும், கூட்டணியை எக்காரணம் கொண்டும் உடைத்துக் கொள்வதில்லை என்றும் முடிவுக்கு வந்துள்ளன.
இரு தரப்பிலும் சில விட்டுக் கொடுத்தல்களுக்கும் தயாராகிவிட்டன.
90 இடங்களில் ஆரம்பித்த காங்கிரஸ் பின்னர் 80 சீட்களுக்கு இறங்கி வந்து இப்போது 62 சீட்கள் கேட்பதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் 48 இடங்கள் தருவதாகக் கூறிய திமுக இப்போது 55 இடங்கள் வரை தரத் தயார் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் கூட்டணி ஆட்சிக்கே நாங்கள் தயாரில்லை என்று சொல்லவில்லை. தேவைப்பட்டால் அப்படி ஒரு அதிகார பகிர்வை தேர்தலுக்குப் பின் வைத்துக் கொள்ளலாம், ஆனால் தேர்தலுக்கு முன்பே அதை அறிவிக்கத் தேவையில்லை என்றும் திமுக கூறியுள்ளது.
இதையடுத்தே துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தேர்தல் குழுவும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஐவர் குழுவும் இன்றிரவு சென்னையில் சந்தித்துப் பேசவுள்ளன.
இதற்காக மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இன்று மாலை சென்னை விரைகின்றனர்.
இந்த மூவரும் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத்துடன் சென்னை வந்து திமுக குழுவையும் பின்னர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது.
அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றும் தெரிகிறது.
இந் நிலையில் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு, தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் எம்எல்ஏ ஆகியோர் இன்று காலை சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் ஐவர் குழு மீண்டும் இன்று திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் சந்தித்து பேசும். எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று அல்லது நாளை இறுதி முடிவு எட்டப்படும். அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்திருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றார்.
உழவர் உழைப்பாளர் கட்சியுடன் திமுக பேச்சு:
இந் நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும், உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் செல்லமுத்து, பொதுச்செயலர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications