சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப் பணிகள்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்திய அரசின் -இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழக அரசின் -தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியால் சென்னை வர்த்தக மையம் 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் 51 சதவீதமும் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் 49 சதவீதமும் பங்களிப்பு செய்து இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில், தொழில் கண்காட்சிகளை நடத்தி அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் நோக்கம்.
சென்னை வர்த்தக மையம், சென்னை மாநகரின் பிரதான இடமான நந்தம்பாக்கத்தில், 25.48 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இவ்வர்த்தக மையம், 10560 சதுரடியில் மூன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கண்காட்சி அரங்கங்களையும், ரூபாய் 60 கோடியே 60 இலட்சம் செலவில், 2000 பேர் அமரக்கூடிய கூட்டரங்கையும் உள்ளடக்கியது.
சென்னை வர்த்தக மையத்தில், 2001-ம் ஆண்டில் ஒரு கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக 84 கண்காட்சிகளையும், 107 கூட்டங்களையும் நடத்துமளவிற்கு தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
இப்போதுள்ள வர்த்தக மையத்தின் பரப்பளவு, நாட்டிலுள்ள பிற வர்த்தக மையங்களின் பரப்பளவைவிட குறைவாக உள்ளதால், உலகளாவிய மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிகளை சென்னையில் நடத்த போதிய இடவசதியில்லை.
சென்னை வர்த்தக மைய விரிவாக்கத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், 2010- மே 3 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது சென்னை வர்த்தக மைய விரிவாக்க திட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், சென்னை வர்த்தக மையம் உலகத்தரத்தில் விரிவாக்கப்படவுள்ளது. மேற்படி விரிவாக்கப் பணிக்கு, டாமாசிக் இன்ஜினியரிங் கன்சார்டியம் நிறுவனம் - சென்னை, கட்டுமானப் பொறியியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், பல அடுக்கு கண்காட்சி அரங்குகள் மற்றும் இரண்டு அடுக்கு அடித்தளங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. மேற்படி விரிவாக்கத்தின் மூலம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் தலா 6 குளிர்சாதனப் வசதிக் கொண்ட கண்காட்சி அரங்குகள் ஒவ்வொன்றும் 66000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளன.
அடித்தளத்தில் 74000 சதுரடி பரப்பளவில், 2000 கார்களும், 2000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரிவாக்கத்தில், உணவுக்கூடம், நூலகம், கூட்டரங்கம், பேரழிவு மேலாண்மை முறை மற்றும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இவ்விரிவாக்கத் திட்டம் ஜூலை 2011-ல் தொடங்கப்பட்டு, மார்ச் 2013-ல் முடிவடையும்.
இவ்விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றப்பின், நாட்டிலேயே சிறந்த தொழிற் கண்காட்சி வளாகமாக சென்னை வர்த்தக மையம் அமையும். சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டத்தினை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications