முன்னாள் தலைமை நீதிபதி உறவினர்களிடம் கருப்பு பணம்: வருமானவரித் துறை
கொச்சி: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் உறவினர்க்ள் மூன்று பேரிடம் கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு டைரக்டர் ஜெனரல் ஈ.டி லூகோஸ் கூறியதாவது,
இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணன் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் அவரது 2 மருமகன்களும், சகோதரரும் கருப்பு பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
நீதிபதி பாலகிருஷ்ணனின் 2 மருமகன்கள் வழக்கறிஞர் பிவி ஸ்ரீநிஜன், வழக்கறிஞர் பென்னி மற்றும் அவரது சகோதரர் அரசு வழக்குரைஞர் பாஸ்கரன் ஆகியோர் கருப்பு பணம் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எப்படி கருப்பு பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம். அவர்களிடம் எவ்வளவு கருப்பு பணம் உள்ளது என்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது.
இந்த விவகாரம் டொர்பாக நீதிபதி பாலகிருஷ்ணனிடம் விசராணை நடத்தப்படுமா என்று தற்போது என்னால் எதுவும் கூற இயலாது. விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதத்தில் பெரும்பாலும் முடிந்துவிடும்.
மத்திய அரசு இந்த விவகாரம் குறித்த அறிக்கையை இன்னும் கேட்கவில்லை என்றார்.
விசாரணைப் பிரிவு முதலில் நீதிபதி பாலகிருஷ்ணன் உறவினர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான சொத்து குறித்த முதல்கட்ட விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தையடுத்து அரசு வழக்குரைஞரான பாஸ்கரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த சில ஆண்டுகளில் தான் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications