3வது அணி அல்லது தனித்து போட்டி-பரிதாப நிலையில் வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றை உள்ளடக்கி 3வது அணி உருவானால் அதில் மதிமுகவும் இணையும் என்று தெரிகிறது. இவர்கள் அதிமுகவுடன் சமரசமாகப் போய்விட்டாலும் கூட தனி அணி காண வேண்டிய கட்டாயத்தில் வைகோ உள்ளார்.

இன்று காலை தேமுதிக அலுவலகத்தில் விஜய்காந்தை சந்தித்து இடதுசாரிகள் பேச்சு நடத்தியபோது, 3வது அணி அமைத்தால் அதில் வைகோவையும் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், அதற்கு முன் அதிமுகவுடன் இறுதியாக ஒருமுறை பேசிப் பார்த்துவிடலாம், நமக்குத் தேவையான தொகுதிகளை அதிமுக தந்தால் சமரசமாகப் போய்விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

விஜய்காந்த், இடதுசாரிகள், புதிய தமிழகம் இன்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது வேலூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றச் சென்றிருந்தார் வைகோ.

இந் நிலையில் அவர் சென்னை திரும்பி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும் தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அதிமுக தரப்பிலிருந்து சமரச முயற்சிகள் தொடங்கிவிட்டதால் இன்று இந்தச் சந்திப்பு நடக்க வாய்ப்பிலை என்றே தெரிகிறது.

முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை ஜெயலலிதா கேவலமான முறையில் வெளியேற்றினார். மதிமுகவுடன் கூட்டணி தொடர்பான இறுதி பேச்சுவார்த்தையை நடத்தாமலேலே அந்தக் கட்சிக்கு கூட்டணியில் இடமே இல்லாத வகையில் 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா.

பேச்சுவார்த்தை, ஆலோசனை என்று கூறி கூறியே வைகோவை கழுத்தறுத்து விட்டார் ஜெயலலிதா. இதை விட வைகோவை யாரும் மரியாதைக்குறைவாக நடத்தியதில்லை என்று கூறும் அளவுக்கு அதிமுகவால் வைகோ அவமானப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் வைகோ இருந்தபோது கூட முதல்வர் கருணாநிதி, இப்படி நடந்து கொண்டதில்லை என்கிறார்கள். இவ்வளவு தொகுதிகள் தர முடியாது என்பதையும் கூட கருணாநிதி நேரில் அழைத்துதான் சொன்னார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஆனால் வைகோவை மிகக் கேவலமாக நடத்தி, ஒரு வார்த்தை கூட அவரிடம் பேசாமலேயே கூட்டணியை விட்டு மறைமுகமாக வெளியேற்றி விட்டார் ஜெயலலிதா.

புதன்கிழமை மாலை வரையிலும் வைகோவுடன் அதிமுக நிர்வாகிகள் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் தங்களுக்கு 23 தொகுதிகள் வேண்டும் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார் என்றும், குறைந்தபட்சம் 21 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

மாலையில் ஜெயலலிதாவை சந்திக்க வருமாறு அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டபோது, தொகுதிகள் எண்ணிக்கை தெரியாமல், சந்திப்பது நன்றாக இருக்காது என வைகோ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் நேற்று அதிரடியாக வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டு விட்டார் ஜெயலலிதா.

இதனால் மதிமுக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தேமுதிக, இடதுசாரிகள் 3வது அணியை அமைக்காவிட்டாலும் வைகோ தனித்தோ அல்லது புதிய அணி அமைத்தோ தான் போட்டியிட்டாக வேண்டும் என்ற நிலைமை உள்ளது.

அவர் தனி கூட்டணி அமைத்தால் அதில் கார்த்திக்கின் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, யாதவர் சமுதாயக் கட்சி என சில கட்சிகளும் பாஜகவும் இணையலாம் என்கிறார்கள்.

மதிமுகவுக்கு, அதிமுக கூட்டணியில் கடைசியாக கூறப்பட்ட இடங்கள் 8 மட்டுமே. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து மார்ச் 19ம் தேதி உயர் நிலைக் குழுக் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'எவ்வளவு பட்டாலும் திருந்தாத அம்மா'-நாஞ்சில் சம்பத்:

இந் நிலையில் மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், அதிமுக வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு மட்டும் அதிமுக வெற்றி பெற்றுவிட முடியாது. நாங்கள் இதுவரை அரசின் தவறுகளை அச்சமின்றி சுட்டிக்காட்டி வந்தோம்.

அதிமுக அறிக்கை மட்டுமே வெளியிடும். மதிமுகவினர் தான் மறியல் செய்தோம், சிறை சென்றோம். எங்கள் உழைப்பும் வியர்வையும் அவர்களுக்கு போய்சேர்ந்தது. ஆனால் எங்கள் உழைப்பு ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் புரியவில்லை. எங்களை உதாசினப்படுத்தும் அம்மையாரின் முடிவை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

நாங்கள் அதிமுக கூட்டணியில் இனியும் தொடர்வோம் என்ற நம்பிக்கை இல்லை. அதற்காக வருத்தப்படவும் போவதில்லை.

வைகோவை பொடா சட்டத்தில் 19 மாதங்கள் சிறையில் வைத்ததாலேயே நாடாளுமன்ற தேர்தலி்ல் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார்.

வரலாறு தரும் படிப்பினில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோவுக்கும், அவரது சகாக்களுக்கும் எது நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆண்மையும், ஆன்ம பலமும் உண்டும்.

நிலத்தை நிராகரித்துவிட்டு நதி நடக்க முடியாது. காற்றை கைது செய்துவிட்டு கால்மணி நேரம் கூட உயிர்வாழ முடியாது. நீலவானத்தை அலட்சியப்படுத்திவிட்டு நிலவு சிரிக்க முடியாது. அதுபோன்று மதிமுகவை நிராகரித்துவிட்டு அதிமுகவால் வெற்றி பெற முடியாது. அம்மையாரின் முடிவால் அதிமுக தொண்டர்களே உற்சாகத்தை இழந்துவிட்டனர். பெற்ற பிள்ளைக்கே விஷம் கொடுத்து கொல்வது போலாகிவிட்டது.

மதிமுக கட்சியானது வெங்கலப் பானை போன்றது. கீழே விழுந்தாலும் சத்தம் தான் வருமே தவிர உடையாது. அதிமுக என்ன குடம் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

பொதுமக்கள் மத்தியில் எங்கள் மீது ஏற்பட்டிருக்கிற அனுதாபமும், அதிமுக தொண்டர்கள் எங்கள் மீது காட்டுகிற பரிவும், இந்த அம்மையார் திருந்தமாட்டார் என நடுநிலையாளர்கள் வைத்திருக்கிற விமர்சனமும் இப்போது எங்களுக்கு அனுதாபத்தை தருகிறது.

கடந்த 2006ம் தேர்தலில் 22 தொகுதிகள் தருகிறேன் என்று கருணாநிதி தெரிவித்தார். ஒரு தொகுதி அதிகமாக கேட்டதற்கு முடியாது என்று அவர் வெறுப்பைக் கக்கினார். இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

அதிமுக கூட்டணியில் 35 சீட்கள் கொடுத்தார். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் 23 சீட்கள் கேட்டோம். 7 சீட், 8 சீட் என்று பேரம் பேசுவது எங்கள் தரத்தையும் தகுதியையும் கொச்சைப்படுத்துவதாகும்.

இதனை கடைசி தொண்டன் கூட பொறுத்துக் கொள்ள மாட்டான். 50 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற சக்தியுள்ளவர்கள் நாங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+