நாளை திமுக 'கதாநாயகி' (தேர்தல் அறிக்கை) வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் 'கதாநாயகனாக' இருந்தது. இந்தத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை 'கதாநாயகியாக' இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

நாளை மாலை தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிடவுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தோழமைக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்த இடங்கள் போக மீதமுள்ள இடங்களை - அந்த இடங்களில் போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களை, வாக்காளப் பெருமக்கள் இந்தப் பட்டியலையேற்று எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்பதைப் போல், பத்திரிகையாளர்களாகிய உங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து உங்களுடைய ஆதரவை நல்ல முறையிலே கழகக் கூட்டணிக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: நீங்களும், துணை முதல்வரும் தொகுதி மாற என்ன காரணம்?

பதில்: தொகுதி இருப்பது தான் காரணம்.

கேள்வி: கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் உங்களுடைய தேர்தல் அறிக்கை மிக முக்கியமாக 'கதாநாயகன்' என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருந்தது. இந்த ஆண்டு தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

பதில்: 'கதாநாயகியாக' இருக்கும்.

கேள்வி: அமைச்சர்களாக இருந்த ஆற்காடு வீராசாமியும், கோ.சி.மணியும் ஏன் போட்டியிடவில்லை?

பதில்: அவர்களுடைய உடல்நலம் அதற்கு இடம்தரவில்லை.

கேள்வி: பிரச்சாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

பதில்: திருவாரூரில் வரும் 23ம் தேதியன்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதிலே தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த எல்லா கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். 24ம் தேதி காலையில் திருவாரூரில் நான் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்.

கேள்வி: திருவாரூரில் நீங்கள் போட்டியிட என்ன காரணம்?

பதில்: நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். நான் அப்படிப் போட்டியிட முடியாத வகையில் அந்தத் தொகுதியை அப்போது தனித் தொகுதியாக்கிவிட்டனர். அதாவது அப்போதிருந்த அரசியல்வாதிகளால்- நான் அங்கே நின்றுவிடக் கூடாது என்பதற்காக- அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டது. இப்போது அது தனித் தொகுதியிலிருந்து விடுபட்டு, பொதுத் தொகுதியாக, நான் அங்கே நிற்கலாம் என்ற அளவிற்கு அது எனக்கு கனி'த் தொகுதியாகிவிட்டது.

கேள்வி:- திமுக இந்த தேர்தலில் 119 தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது, பெரும்பான்மை பெற முடியும் என்று கருதுகிறீர்களா?

பதில்: அந்த நம்பிக்கையோடு தான் களம் இறங்குகிறோம்.

கேள்வி: இந்தத் தேர்தலில் எதை மையப்படுத்தி உங்கள் பிரச்சார வியூகம் இருக்கும்?

பதில்: 19ம் தேதி நான் வெளியிடவிருக்கின்ற தேர்தல் அறிக்கையில் நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்.

கேள்வி: இந்தத் தேர்தலில் இந்த வேட்பாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்?

பதில்: பெரியாரிடம் அவர்கள் பெற்ற கொள்கை உறுதியையும் , அண்ணாவிடம் பெற்ற அரசியல் பண்பாட்டையும் கேடயங்களாகக் கொண்டு இந்தத் தேர்தல் யுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் மூன்றாவதாக ஒரு அணி உருவாகின்ற அளவிற்கு ஜெயலலிதா அணியிலிருந்து பிரிந்து கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: மற்றவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கலைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடையக் கூடியவன் அல்ல.

கேள்வி: பெண்களுக்கு 33 சதவிகித இடங்கள் ஒதுக்கப்படவில்லையே?

பதில்: அது இன்னமும் சட்டமாக ஆகவில்லை. இங்கே நாங்களாக வகுத்துக் கொண்டது - தமிழ்நாடு அரசு மாநில அளவில் பெண்களுக்கு உரிய இடங்களைத் தருகின்ற அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறோம். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டரீதியாக நிறைவேற்றப்படுமேயானால் உங்களுடைய கேள்வி இதற்குப் பொருந்தும்.

கேள்வி: ஆயிரம் விளக்கு தொகுதி வெற்றிகரமான தொகுதி. அப்படியிருந்தும் துணை முதல்வர் அங்கே போட்டியிடாததற்கு என்ன காரணம்?

பதில்: அவரையே கேளுங்கள்.

கேள்வி: உங்கள் அணியின் பிரச்சாரத்திற்கு பிரதமர் அல்லது சோனியா காந்தி போன்ற தலைவர்கள் வருவார்களா?

பதில்: இன்னும் பிரச்சாரமே ஆரம்பிக்கவில்லையே என்றார்.

கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை:

இந் நிலையில் இன்று மாலை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் வியூகம், பிரசாரம், தேர்தல் அறிக்கை, அனைவரும் இணைந்து பணிபுரிவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

திமுக கூட்டணிக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு:

இந் நிலையில் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய லீக் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் எம்.பசீர் அகமது, மாநில பொதுச்செயலாளர் அப்துல்காதர், மாநில பொருளாளர் எஸ்.ஒய்.ஜவஹர் அலி, மாநில துணைத்தலைவர் ஐ.நூருதீன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, அகில இந்திய போதகர்கள் மையத்தின் தலைவர் எஸ்.ராஜா, பொதுச்செயலாளர் பேராயர் ஏ.ஸ்டீபன், பொருளாளர் ஜோன்குட்டி, துணைத்தலைவர் பேராயர் ஜேசுதாஸ் மனோகர், துணைச்செயலாளர் ஜெயசிங்ராஜ், செயலாளர்கள் எஸ்.குமார், வில்பிரட் ராஜ், எல்.செல்லார்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போதகர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி அறிக்கை:

இந் நிலையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டு நிறைவு விழாவையொட்டி அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டு, 25.19 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தஞ்சை நகரில் பல அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பேரூராட்சிகள்'' எனும் உள்ளாட்சி அமைப்பு வகையினை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

பேரூராட்சிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த "அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்'' எனும் ஒரு சிறப்புத் திட்டம் நான்கு ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என 11.4.2007-ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு; 6.7.2007 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டு, 3.9.2007 அன்று மாமல்லபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அது முதல் ரூ.280.50 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அனைத்துப் பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புர அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.31.84 கோடி மதிப்பீட்டில் 28 பேரூராட்சிகளில் 479 சாலை மற்றும் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

சுனாமி பாதித்த 5 கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 19 பேரூராட்சிகளில் ரூ.63.67 கோடி செலவில் சாலைகள் மறு சீரமைத்தல் மற்றும் கட்டிடங்கள் பழுது பார்த்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் 12.78 கோடி ரூபாய் செலவில் 19 பேரூராட்சிகளில் 60,966 உறுப்பினர்கள் அடங்கிய 3,387 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு குழு உறுப்பினர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு நிலையான சொத்துகளை உருவாக்க பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் 969 மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட ரூ.96.90 லட்சம் மானியம் அளிக்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார உதவி மற்றும் சுழல் நிதி பெற்ற 22,891 பயனாளிகளுக்கு உயிர்க் கூறு அங்க அடையாள அட்டை வழங்குவதற்கு இந்த அரசு ரூ.24.33 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்து, அதில் ரூ.11.42 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

கும்பகோணம், ஆலந்தூர், வளசரவாக்கம், மதுரை ஆகிய நகரங்களிலும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், நடப்பு நிதியாண்டில் 23 பாதாள சாக்கடைத் திட்டங்கள் 806.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புர உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 136 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 4 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு; மறைமலைநகர் பாதாள சாக்கடைத் திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. அரியலூர், உடுமலைப்பேட்டை 66 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளன. முதற்கட்ட அம்பத்தூர் பாதாள சாக்கடைத்திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.35.86 கோடி மதிப்பீட்டில் 22.6.2010 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் பணிகள் 2012 ஜுலையில் முடிவடையும்.

திருவொற்றியூர் நகராட்சிப் பகுதியில் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தும் பணி தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்ட நிதி உதவியுடன் 5 சிப்பங்களில் ரூ.87.63 கோடி திருத்திய திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இப்பணிகள் 2012 டிசம்பரில் முடிவுறும்.

பல்லவபுரம் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.72.10 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சியில் ரூ.6.08 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.14.48 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை முடிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டங்களின் மூலம் 1,70,477 வீடுகளுக்குப் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் பெருகிவரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ரூ.9.72 கோடி செலவில் வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் 30.3.2008 அன்றும்; ரூ.19.80 கோடி செலவில் உஸ்மான் சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் 14.08.2008 அன்றும்; ரூ.16.50 கோடி செலவில் கோபதி நாராயணா சாலை மற்றும் திருமலை சாலை சந்திப்பில் கட்டப்பட்ட கலைவாணர் மேம்பாலம் 29.12.2008 அன்றும்; ரூ.19.93 கோடி செலவில் டர்ன்புல்ஸ் சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட ஜி.கே.மூப்பனார் மேம்பாலம் 11.12.2009 அன்றும்; ரூ.6.03 கோடி செலவில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் கட்டப்பட்ட ஆலந்தூர் அபிரகாம் மேம்பாலம் 11.12.2009 அன்றும்; ரூ.4.33 கோடி செலவில் ஜோன்ஸ் சாலையில் கட்டப்பட்ட சி.பி.பவளவண்ணன் வாகனச் சுரங்கப்பாதை 11.12.2009 அன்றும் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

ரூ.15.75 கோடி செலவில் ரங்கராஜபுரம் ரெயில்வே சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம், ரூ.13.39 கோடி செலவில் வில்லிவாக்கம் ரெயில்வே சந்திக்கடவு-2ல் வாகன சுரங்கப்பாதை, ரூ.10.55 கோடி செலவில் மணியக்கார சத்திரத் தெருவில் ரெயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகனச் சுரங்கப்பாதை ஆகிய பணிகள் நடைபெறுகின்றன; இப்பணிகள் விரைவில் முடிவடையும்,

சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மழைநீர்த் தேக்கம் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் துறை மூலம், 158.61 கி.மீ. நீளத்திற்கு ரூ.89.68 கோடியில் மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை வாழ் மக்களுக்கு மழைக்காலத்தில் உண்டாகும் வெள்ள பாதிப்பினால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்க்கும் விதமாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் மூலமாக சிறிய மற்றும் பெரிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கு ரூ.1447.91 கோடி திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்நாள் வரை சென்னை மாநகராட்சி செயல்படுத்திட அனுமதிக்கப்பட்ட திட்டங்களில் இதுவே பெருந்திட்டமாகும்.

மெரினா அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் நடைபாதையைச் சுத்தம் செய்வதற்கு, அழுக்கைத் தேய்த்து சுத்தப்படுத்தும் இயந்திரம், புல்தரையைச் சமப்படுத்துவதற்கான உபகரணம், மெரினா கடற்கரையில் முதன் முதலாக மணற்பரப்பில் மணலை ஜலித்து சுத்தம் செய்வதற்கான இயந்திரம், மெரினா கடற்கரையின் நடைபாதையைச் சுத்தம் செய்வதற்கு அமர்ந்து இயக்கும் சிறிய வகையிலான 2 இயந்திரப் பெருக்கிகள் ஆகியன கொள்முதல் செய்யப்பட்டு மெரினா கடற்கரைப்பகுதி எழிலூட்டும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+