திமுக, காங்கிரஸ் ஊழல் இரட்டையர்கள்: பாஜக செயலாளர் முரளிதர் ராவ்
கோவை: திமுகவும், காங்கிரஸும் ஊழல் இரட்டையர்கள் என்று பாஜக தேசியச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது.
இந்த தடவை கணிசமான பாஜகவினரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஊழல்களை முன்னிலைப்படுத்தியே பிரசாரம் செய்வோம்.
திமுக ஆட்சியில் விவசாயம், தொழில் துறை பின்தங்கியுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஓடும் ஆறுகளை இணைப்பது பற்றி எவ்வித மேம்பாட்டுத் திட்டமும் இல்லை.
மின்வெட்டு பிரச்னையால் தொழில் துறை வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழில் துறையினரின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க திமுக அரசு தவறிவிட்டது.
திமுகவும், காங்கிரஸும் ஊழல் இரட்டையர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல். 2ஜி அலைக்கற்றை முறைகேடு, காமன்வெல்த் முறைகேடு, ஆதர்ஷ் முறைகேடு குறித்து பிரசாரம் செய்யவிருக்கிறோம்.
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் கருணாநிதி தான் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விட்டுவிட்டு திருவாரூரில் போட்டியிடுகிறார்.
வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
மதச்சார்பற்றவர்கள் என்று கூறும் அரசு, தேர்தல் வந்தவுடன் அதை மறந்து செயல்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவரமாக செயல்பட வேண்டும்.
பாஜக தலைவர் நிதின் கட்கரி, மூத்த தலைவர் அத்வானி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.
வரும் 31-ம் தேதி திருப்பூர், கோவையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு பேசுகிறார். மற்ற தலைவர்களின் சுற்றுப் பயணம் இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications