ஊழலை மறைக்க காங்கிரசிடம் பம்மும் திமுக: டி.கே.ரங்கராஜன் குற்றச்சாட்டு
நாகப்பட்டினம்: ஊழலை மறைக்க காங்கிரஸ் கட்சியிடம் திமுக அஞ்சி நடுங்குகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சாட்டியக்குடி மற்றும் திருப்பூண்டியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
பதவிக்காகவும், ஊழலை மறைக்கவும் காங்கிரசிடம் திமுக அஞ்சி நடுங்குகிறது. ஒரு காலத்தில் இமயம் வரை சென்று வென்று மீண்டு வந்த வீரத்தமிழன், இன்று டெல்லி சென்று மீண்டு வர முடியாமல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனி ஒருவர் இவ்வளவு பெரிய ஊழலைச் செய்ய முடியுமா என்று கருணாநிதி கேட்கிறார். முடியாது பலரும் சேர்ந்து தான் செய்திருக்கிறீர்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் எதுவுமே நடக்கவில்லை என்றால் சிறைவாசமும், கைதுகளும், சிபிஐ விசாரணையும், சாதிக் பாட்சா தற்கொலையும் ஏன் நடந்தது?
சுப்பனுக்காகவும், குப்பனுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட திமுக என்ற இயக்கத்தில் இன்று அதன் தலைவர்களும், அமைச்சர்களும் பெரிய பெரிய கோடீஸ்வரர்களாகிவிட்டனர்.
கலாநிதி மாறனுக்கும், அவர் மனைவி காவேரிக்கும் வருடச் சம்பளம் மட்டும் தலா ரூ. 39 கோடியாகும். மொத்தம் 78 கோடி ரூபாய். இந்தச் சம்பளம் டாடா, பிர்லா, அம்பானிக்குக் கூடக் கிடையாது.
திமுக நீர்த்துப் போய்விட்டது. அது அழியாமல் காப்பாற்றப்பட வேண்டுமானால் அது தோற்பது தான் நல்லது.
விவசாய இடு பொருட்கள், ரசாயன உரவிலை கூடிக் கொண்டே இருக்கின்றன. நெல் விலை மட்டும் கூடவில்லை.
சாயக்கழிவு பிரச்சனையில் திருப்பூர் காலியாகிக் கொண்டிருக்கிறது. அரசு அதற்கான மாற்று ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை? அரசின் அலட்சியத்தால் இன்று நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், மில்களும் மூடிக்கிடக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் மின் வெட்டு இல்லாத நாளே இல்லை எனறு செல்லலாம். இருள் சூழ்ந்துள்ள இந்த ஆட்சியை தூக்கி ஏறிந்துவி்ட்டு தமிழகத்திற்கு ஒளி தரும் நல்லாட்சியை கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் மகத்தான ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications