அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றும் திமுக முகத்திரையை கிழிக்க வேண்டும்: விஜயகாந்த்
வேலூர்: அண்ணா பெயரைச் சொல்லி ஏமாற்றும் திமுகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர், அணைக்கட்டு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆளும் கட்சியினர் பாலாற்றில் மணல் கொள்ளையும், ஆட்சியில் பகல் கொள்ளையும் அடித்தனர். பாலாற்றில் 100 லாரிகளில் மணல் அள்ள உரிமம் வழங்கிவிட்டு 5 ஆயிரம் லாரிகளில் மணலை கடத்துகின்றனர்.
அவர்கள் ஒன்றும் தண்ணீருக்காக போராடவில்லை. மணல் கடத்துவதற்காக போராடினார்கள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் நாடு, நாடாக இருக்கும்.
விண்ணை முட்டும் விலவாசியால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஊரை ஏமாற்றுபவர்களுக்கு வாக்களிக்க மேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
நான் பெரிதும் நேசித்த எம்.ஜி.ஆரின் கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். நான் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்கவில்லை.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். கட்சியினர்கள் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.
சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன். பொதுமக்களுக்கு தான் கஷ்டம். எனவே, அதிமுக கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications