ஜெயலலிதாவுக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதி இல்லை-ராமதாஸ்
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருப்பதற்கு கூட தகுதி கிடையாது. சட்டசபையில் நாங்கள் செய்ததில் நூறில் ஒரு பங்கு பணியைக் கூட அதிமுக செய்யவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை தீவுத் திடலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ்,
ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஒரு முற்போக்கு கூட்டணி. எதிரணியில் இருப்பது பிற்போக்கு கூட்டணி. 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஜெயலலிதா தான் முதல்வராக இருந்தார். அப்போது கான்கிரீட் வீடு தருவோம், கியாஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி தந்தார். ஆனால், எதையும் தரவில்லை.
ஆனால் முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகளை பட்டியலிட நேரமில்லை. மத்திய அரசோடு மாநில அரசுக்கு ஒரு நல்லிணக்கம் தேவை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பிரதமர் நரசிம்மராவை தலைமுறை இடைவெளி என்றார். அத்வானிக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகக் கூறினார். வாஜ்பாய் செயலற்ற பிரதமர் என்றார். மன்மோகன் சிங்கை பலவீனமான கால்களை கொண்டவர் என்றார். வாஜ்பாயுடன் மோதும் போக்கை கடைபிடிக்காமல் இருந்திருந்தால் காவிரி பிரச்சனை தீர்ந்திருக்கும்.
கருணாநிதி தலைமையிலான அரசு மத்திய அரசுடன் இணக்கமான அரசாக இருந்ததால் தான் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலை திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து வருகிறது. கலெக்டர் சகாயத்தின் அத்துமீறல்கள் ஏராளம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு வீழ்ச்சி அடையும். ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட தகுதி கிடையாது.
சட்டசபையில் நாங்கள் செய்ததில் நூறில் ஒரு பங்கு கூட அதிமுக செய்யவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வரப் போவதில்லை, சில ஊடகங்கள் தான் வேண்டுமென்றே பொய்யான பரப்புரை செய்து வருகின்றன.
ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க தவறினால் தமிழகம் இருண்ட தமிழகமாக மாறிவிடும் என்பது மக்களுக்கு தெரியும். 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வேண்டும் என்றார்.
முன்னதாக சென்னை ஆர்.கே. நகர் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே. சேகர்பாபுவை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். பின்னர் பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் என்.ஆர். தனபாலனை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய ராமதாஸ், திமுக தலைமையில் கூட்டணி அமைக்கும் நேரத்தில், இது ஒரு சமூக நீதி போராட்டத்துக்கான அணி என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். அதை உண்மையாக்கும் விதத்தில், உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஓர் அணியை அவர் உருவாக்கியுள்ளார்.
எதிரணி தடுமாறும் நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. நடிகரின் தடுமாறும் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது. இளைஞர்கள் பலர் சேர்ந்ததும், கட்சி ஆரம்பித்த நடிகர், கோட்டை நாற்காலியில் அமர துடிக்கிறார். சினிமா எடுத்து அதில் முதல்வராக நடித்து, திருப்திப்பட வேண்டியது தான்.
அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார். அதற்கு அதிமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒரு கட்சி, இதுக்கு ஒரு கூட்டணி.
தேர்தல் நேரத்தில் மட்டும் திட்டங்களை அறிவிப்பவர் ஜெயலலிதா. 10 ஆண்டுகள் பதவியில் இருந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இனிமேலும் ஒன்றும் செய்யப்போவதில்லை. கருணாநிதி ஆட்சியில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இலவசங்கள் கொடுக்க முடியாது என்றவர்கள், போட்டி போட்டு இலவசத்தை அறிவிக்கின்றனர். இது மக்களிடம் எடுபடாது. கருணாநிதி படிக்க உதவி செய்கிறார். ஜெயலலிதாவோ ஆடு, மாடு கொடுப்பேன் என்கிறார். எல்லாரும் இனி ஆடு, மாடு மேய்க்க வேண்டியது தான்.
திமுக ஆட்சியின் சாதனைகள் மிகச் சாதாரண மக்களால்கூட பாராட்டப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலத்தில், மக்களுக்கு செய்த சாதனைகள் என குறிப்பிட்டுக் கூற எதுவுமே இல்லை. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரூ.100 கோடி செலவில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், கும்பகோணம் மகாமக குள சாவுகள் ஆகியவை மட்டும் எப்போதும் மறக்க முடியாத வகையில், மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டன.
தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் திமுக அணிக்கு ஆதரவாக அலை வீசத் தொடங்கியுள்ளது. மிகப் பெரும்பாலான தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற்று, 6வது முறையாக கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications