சாதிக்பாட்சா வீட்டில் சிபிஐ-தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை

முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா, சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் இவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். இவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தனது படுக்கை அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் பாட்சா.
இந்த வழக்கை தேனாம்பேட்டை போலீசார் முதலில் விசாரித்தனர். சாதிக் பாட்சாவின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான பெரம்பலூரில் அடக்கம் செய்யப்பட்டது.
சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கூறினாலும், அவரது சாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது தமிழக அரசு.
இந் நிலையில், 2 நாட்களுக்கு முன் சாதிக் பாட்சாவின் தற்கொலை வழக்கை சிபிஐ ஏற்று விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது.
நேற்று காலையில் டெல்லியில் இருந்து சிபிஐ இணை இயக்குனர் மற்றும் 2 பெண் அதிகாரிகள் உள்பட 10 பேர் சென்னை வந்தனர். அவர்களுடன் மத்திய அரசின் தடய அறிவியல் துறை இயக்குனரும் வந்தார்.
சென்னை வந்தவுடன் தேனாம்பேட்டை போலீசார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை அடங்கிய ஆவணங்களை சி.பி.ஐ. பெற்றுக் கொண்டது.
பின்னர் சாதிக் பாட்சாவின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். பல தடயங்களையும் ஆய்வு செய்தனர். சுமார் 8 மணி நேரம் சோதனை நீடித்தது. சாதிக் பாட்சாவின் உறவினர்கள் சிலரையும், வீட்டு வேலைக்காரர்கள் சிலரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
சாதிக் பாட்சா அவரது வீட்டின் மேல்மாடியில் உள்ள படுக்கை அறையில்தான் தற்கொலை செய்து கொண்டார். அந்த படுக்கை அறையை சிபிஐ அதிகாரிகளும், மத்திய அரசின் தடய அறிவியல் இயக்குனரும் ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications