பல்லாவரத்தில் பணப் பட்டுவாடா பிரச்சனையில் திமுக-அதிமுக மோதல்: 9 பேர் காயம்
தாம்பரம்: பல்லாவரம் தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக கேள்விப்பட்ட அதிமுகவினர் அதை தடுக்க வந்தபோது இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயம் அடைந்தனர்.
குரோம்பேட்டை சி.எல்.சி. ஒர்க்ஸ் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அங்கு வைத்து திமுகவினருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக 10 அதிமுகவினர் அந்த கல்லூரிக்கு சென்றனர். முன்னதாக இது குறி்த்து தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தனர்.
கல்லூரிக்கு சென்றபோது அங்கிருந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த தாக்குதலில் வழக்கறிஞர் நாகேஸ்வரன், அதிமுக வேட்பாளர் தன்சிங் மகன் ஜெயபால், வீரராகவன், கண்ணன் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அதிமுகவினர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர்.
திருநீர்மலை ஜெயக்குமார், வினாயகம், சங்கர் ஆகிய திமுகவினருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து வேட்பாளர் தன்சிங் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் அங்கு குவிந்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அங்கிருந்த கும்பலை கலைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது,
இந்த மோதல் குறித்து இரு தரப்பினரின் புகார்களை பெற்று வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக சார்பில் வழக்கறிஞர் நாகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் திமுகவைச் சேர்ந்த ஜெய்குமார், விஜயகுமார், பாபுஜி, சந்திரன் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுகவினரிடம் இருந்து புகார் பெற்று எதிர் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications