நான் 100 சீட் கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பார் கருணாநிதி-வடிவேலு
பட்டுக்கோட்டை: நான் தனியாக கட்சி ஆரம்பித்து, அய்யா, 100 சீட் கொடுங்க என்று கேட்டிருந்தாலும் கலைஞர் கொடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் காமெடி நடிகர் வடிவேலு.
திமுகவின் பலமான பிரசார பீரங்கியாக மாறியுள்ளார் காமெடி நடிகர் வடிவேலு விஜயகாந்த்தை மட்டும் குறி வைத்துப் பேசி பிரசாரம் செய்து வருகிறார்.
பட்டுக்கோட்டையில் பிரசாரம் செய்த அவர் அங்கு பேசுகையில்,
உங்களுக்கெல்லாம் நான் ஒரு உண்மையைச் சொல்லப் போகிறேன். இதுவரை சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன். வடிவேலு உனக்கு சீட் எதுவும் வேணுமா என்று கலைஞர் என்னிடம் கேட்டார்.
அதெல்லாம் வேணாம்யா. உங்களுக்கு ஆதரவா நான் பிரச்சாரம் செய்யுறேன் என்று சொல்லிவிட்டேன்.
எனக்கு கட்சி ஆரம்பிக்கனும் என்று ஆசை இருந்தா நான் 100 சீட் கேட்டிருந்தாலும் கலைஞர் கொடுத்திருப்பார் என்றார் வடிவேலு.
வடிவேலுவின் பேச்சைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் வடலூரில் குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை ஆதரித்து வடிவேலு பேசுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி பல மக்கள் நலத்திட்டங்களை தீட்டி மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என அடிப்படை தேவைகளை செயல்படுத்தி மகிழவைப்பவர் கருணாநிதி. ஏழைகளின் கஷ்டங்களை தெரிந்தவர். ஏழை மக்கள் தொலைக் காட்சி, ரேடியோ வாங்க முடியாததை எண்ணி அவர்களும், தொலைக்காட்சியை பார்க்க வைத்தவர்.
ரேசனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியவர். குழந்தை தொழிலார்களை ஒழித்து அவர்கள் கல்வி மேம்பட சமச்சீர் கல்வி வழங்கியவர், ஏழையும், கலெக்டராகவோ, உயர் அதிகாரியாகவோ வர வழி வகுத்தவர். ஆனால் எதிரணியினர் ஆடு மாடுகளை வழங்கி மீண்டும் பழைய நிலையில் மக்களை ஆடு, மாடு மேய்க்க வைக்க நினைக்கிறார்கள்.
கருவறையில் தொடங்கி கல்லறை வரை நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. மக்களுக்காக நலத்திட்டங்களை வழங்கும் கலைஞரின் சாதனைகளை பேசினால் வெடிகுண்டு போடுவோம் என்கிறார்கள். போடுங்கள் பார்த்து கொள்கிறேன். விருத்தாசலத்தில் ஒருவர் வந்து நின்று பாலாறும், தேனாறும் ஓடும் எனக்கூறி மக்களை ஏமாற்றிவிட்டார். இவர் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் எனக்கூறிக் கொள்கிறார் என்றார்.
நெய்வேலி தொகுதி காடாம்புலியூரில் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகனை ஆதரித்து பேசும்போது, முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போடுங்கள். எதிரிகள் நாவில் எச்சில் ஊறி சாகட்டும்.
விருத்தாசலம் மக்கள் இனிமேல் ஏமாறக் கூடாது. சினிமாவில் பணத்தை அள்ளி தரமுடியும். ஆனால் நிஜத்தில் அப்படி செய்ய முடியாது. சினிமா என்பது ஒரு படக்காட்சி. அந்த காட்சியை காட்டி ஆட்சியை பிடிக்க முடியாது. மக்களே நம்பாதீர்கள் சினிமா காட்சி நிழல் தான். நிஜத்தை மட்டும் நம்புங்கள்.நிழல் வேறு, நிஜம் வேறு. அ.தி.மு.க. கூட்டணி சரியில்லை. அது குழப்பமான கூட்டணி.
கோவையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்துக்கு கறுப்பு எம்.ஜி.ஆர். செல்லவில்லை. ஏனெனில் உடன்பாடு ஒத்துவரவில்லை. மனரீதியாக உடன்பாடு ஏற்படாத நிலையில், தொகுதி உடன்பாடு எப்படி ஏற்படும்.எம்.ஜி.ஆர். பெயரை சொல்ல விஜயகாந்திற்கு என்ன உரிமை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications