நாட்டு நலன் கருதியே அதிமுகவுடன் கூட்டணி-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகிற தேர்தலில் மக்கள் அமைதிப் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் புதன்கிழமை (ஏப்ரல் 13) நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு குடும்பத்தின் கோரப் பிடியில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டுள்ளது. மக்களாட்சியைப் பயன்படுத்தி முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, மக்களை வாழ வைக்கவில்லை. தன் குடும்பம் உயர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினார். அதன் விளைவாக தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையே கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், சினிமாத்துறை, நிலம் வாங்கி வீடு கட்டுதல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியின் குடும்பம் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. மக்களின் உரிமைகளை கருணநிதி குடும்பத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்பதே இந்தத் தேர்தலில் நமது தலையாய கடமையாகும். மக்களை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், ஆள் கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்றவை பெருகிவிட்டன.

மத்திய அரசில் பங்குபெற்று கருணாநிதிக் குடும்பத்தினர் ஈடுபட்ட ரூ. 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழல், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்து விட்டது.

தமிழ்நாட்டின் பல துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி, தமிழ்நாட்டுக்கே அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ள கருணாநிதியின் ஆட்சியை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் அகற்றுவதே நாம் பிறந்த தமிழ்நாட்டுக்குச் செய்ய வேண்டிய தலைசிறந்த பணியாகும்.

இதற்கான வாய்ப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கிடவே இதுவரையில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, இப்போது அதிமுக உள்பட இதர எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது. நாடு முதலில், கட்சி பிறகு என்றார் அண்ணா. ஆகவே நாட்டு நலன் கருதி அதிமுக, தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கூட்டணியாகும். இது, சகல துறைகளிலும் வீழ்ந்து விட்ட தமிழ்நாட்டை தூக்கி நிறுத்துகின்ற பெரு முயற்சியாகும்.

மத்தியிலும், மாநிலத்திலும் அரசாட்சியில் திமுகவினர் உள்ளனர். குறிப்பாக திமுகவினர் பண மழை பொழியத் துவங்கி விட்டனர். ஓரளவுக்காவது நியாயமாக தேர்தல்கள் நடத்த வேண்டுமென்று பாடுபடுகின்ற தேர்தல் கமிஷனையே, முதல்வர் கருணாநிதி மறைமுகமாக மிரட்டுகிறார்.

இன்று முதல் தேர்தல் முடியும் வரை பணத்தைக் கொண்டு வாக்குகளை திருட முயற்சிப்பவர்களிடமிருந்து பாமர மக்களைக் காப்பாற்றவும், வாக்காளர்களை இடை விடாது அணுகவும், வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்யவும் கட்சியினர் தொடர்ந்து உழைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களும் இந்தத் தேர்தல் மூலம் அமைதிப் புரட்சியை உருவாக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தையே வீல்சேரில் உட்கார வைத்து விட்டார் கருணாநிதி:

முன்னதாக நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் இறுதிக் கட்ட பிரச்சாரம் செய்து பேசிய விஜய்காந்த்,

ரிஷிவந்தியம் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று நான் சொல்லியாக வேண்டும். தொண்டை வலியால் அவதிப்பட்ட என்னை டாக்டர் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இருப்பினும் மக்களுக்காக நான் பேசித்தான் ஆக வேண்டும். இதோ சிவனின் எதிரில் நின்று பேசுகிறேன். ரிஷிகளின் வனம் தான் ரிஷிவந்தியம். இது சிவனுக்கு உகந்த இடம். ஆனால், இத்தொகுதியில் சிவராஜ் செய்வது அட்டூழியமாக உள்ளது. நான் பிரசாரத்திற்காக சென்ற இடமெல்லாம் எந்த சாலையும் சரியில்லை. ஐந்து முறை சிவராஜ் எம்.எல்.ஏ. என்று கூறுகிறார்களே இந்த தொகுதிக்காக என்ன செய்தார்?.

ரிஷிவந்தியத்தை முன்மாதிரியாக மாற்றுவதற்காகவே போட்டியிடுகிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல் இரவு நேரத்தில் வந்து 500 ரூபாய் தந்து ஓட்டுகேட்கும் நிலையில் சிவராஜ் உள்ளார்.

காங்கிரஸ் கட்சி கருணாநிதியுடன் கூட்டணி வைத்துள்ளதே, உருப்பட முடியுமா?. வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தையே வீல்சேரில் கருணாநிதி உட்கார வைத்து விட்டார். ஊழல் செய்வதற்கு மட்டும் அவருக்கு உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று நான் பேசுபவன். வழவழ கொழகொழவென்று பேசப்பிடிக்காது.

எனக்கு மூன்று ஆண்டுகள், டைம் கொடுங்கள் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பாலம், ஆர்கவாடி பாலம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி காட்டுகிறேன். சனி என்பது கருணாநிதி, பிணி என்பது ஸ்டாலின். இவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவேன். காடுவெட்டி குரு என்றால் எனக்கு பயமா; யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், மக்கள் காலில் விழுகிறேன் என்று கூறினார். ஏன், இத்தனை நாள் செய்த சாதனைகள் எடுபடவில்லையா? நேற்று முன்தினம் 200 ரூபாய், நேற்று 500 ரூபாய் என்று ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தேர்தல் கமிஷன் வேடிக்கை பார்க்கிறது. பெரியாரை பற்றி பேசும் கருணாநிதி, தனது தோளில் உள்ள மஞ்சள் துண்டு, சிவப்பு கல் மோதிரத்தை கழட்டி போடுவாரா?.

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஊராக ரிஷிவந்தியம் உள்ளது. மூன்று பாலம், இணைப்பு சாலை, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ்வசதி இவைகளை செய்துவிட்டுத்தான் அனைத்து கிராமத்திற்கும் நான் வருவேன்.அத்தியாவசியப் பொருட்களை பார்த்து பார்த்து நாம் வாங்குகிறோம், வாழ்க்கைக்கு உபயோகப்படும் கட்சியை கவனமுடன் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டாமா?. இந்த தொகுதியை முன்னேற்ற உங்களின் ஆதரவை தர வேண்டும்.

நாட்டில் எங்கும் ஊழல். எதிலும் ஊழல். ஊழல்தான் அதிகமாக உள்ளது. ஊழலை ஒழிக்கவேண்டும் என்றால் அவர்களை முதலில் ஒழிக்கவேண்டும்.

தி.மு.க. பண பலம் படைபலம் கொண்டு போட்டி போடுகிறது. என் மக்களுக்கு நல்லது செய்தால் செய்யுங்கள். நான் வேட்பாளர்களை, கட்சியினரை திட்டுகிறேன், அடிக்கிறேன் என்று புகார் கூறுகிறார்கள். அது எனது பிறவி குணம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+