போலீஸாருக்கு படிப் பணம் தர மறுத்து சதி செய்கிறார் தலைமைச் செயலாளர்-ஜெ. புகார்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது புகார் கூறியுள்ளார்.

இன்றுகாலை 9 மணியளவில் ஜெயலலிதா தான் வாக்களிக்க வேண்டிய ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார். பின்னர் அங்கு ஓட்டளித்தார்.

பிறகு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அதிமுக வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூ.300 வழங்கப் பட வேண்டும். ஆனால் மாநில அரசு முழு தொகையையும் கொடுக்க மறுப்பதால் அவர்கள் கோபத்துடன் உள்ளனர்.

எனக்கு கிடைத்த தகவல்படி முதல்- அமைச்சரின் ஆணையின் பேரில் தலைமை செயலாளர் பாதுகாப்பு படையினருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறுப்பதாக தெரிய வந்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார், துணை ராணுவ படையினர் போன்ற பலர் இங்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் சும்மாதான் நிற்கிறார்கள். இவர்களுக்கு ரூ.300 பணம் வழங்குவது தேவை இல்லாதது என்று தலைமை செயலாளர் முடிவு எடுத்துள்ளார்.

இந்த செயல் பாதுகாப்பு படையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வேலைநிறுத்தம் செய்யக் கூடிய அளவில் மனவேதனையில் உள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.300 தருவது இவர்களுக்கு சாத்தியம் இல்லை என்று கூறி இருப்பதை யாரும் ஏற்க முடியாது.

எனவே நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது. இதை தேர்தல் கமிஷன் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் இந்த நேரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் ரவுடிகளை அனுப்பி வாக்காளர்களை வாக்குச்சாவடியில் இருந்து பயமுறுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டு விடும்.

இதனால் கள்ள ஓட்டு போடும் வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதுசம்பந்தமாக தனியாக அறிக்கை விட இப்போது நேரம் இல்லாத காரணத்தால் இந்த செய்தி மூலம் தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை செயலாளர் போலீசாருக்கு தினப்படி பணம் கொடுக்க முடியாது என சட்டப்படி கூற முடியாது என்றார்.

அப்போது செய்தியாளர்கள், இந்த தேர்தலில் ஏகப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக செய்தி வருகிறதே, பணப்பட்டுவாடா மூலம் தேர்தல் முடிவு வேறு மாதிரி இருக்கும் என நினைக்கிறீர்களா? என்று கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.50 கோடி வரை பணம் பிடிபட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் ஒட்டு மொத்த தொகையில் ஒருதுளி மட்டுமே. ஆனாலும் வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

ஆளுங்கட்சியினர் இப்படி வாரி இறைத்தாலும் மக்கள் இந்த முறை இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என உறுதியாக உள்ளனர்.

கருணாநிதி அரசு வெளியே போக வேண்டும், கருணாநிதி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலின் தாக்கம் இந்த தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற கேள்விக்கு,

கண்டிப்பாக எதிரொலிக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டும் அல்ல, அது வெறும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடிதான். அதற்கும் மேலும் தமிழ்நாட்டில் மணல்குவாரி மூலம் ரூ.50 ஆயிரம் கோடி, கிராணைட் குவாரி மூலம் ரூ.80 ஆயிரம் கோடி என இப்படி பல ஊழல்கள் இருக்கிறது.

இதை எல்லாம் பார்த்து மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு வந்துள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ஊழல் எல்லா காலத்திலும், எல்லா நாட்டிலும் இருந்துள்ளது. ஆனால் இப்போது நாம் தி.மு.க. ஆட்சியில் பார்த்த ஊழல் இதுவரை கண்டறியாதது என்றார்.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது,

எங்களுக்கு ஒரு தெளிவான மெஜாரிட்டி, தனி மெஜாரிட்டி வரும் அளவுக்கு தீர்ப்பு கிடைக்கும். எங்களது கூட்டணி கட்சிகளுக்கும் அமோக வெற்றி கிடைக்கும் என்றார்.

2006 தேர்தலில் உங்களுக்கு அதிக சதவீத ஓட்டு கிடைத்தது. ஆனால் குறைந்த தொகுதிகளில் தானே வெற்றி பெற முடிந்தது? என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

இந்த தேர்தலில் அப்படி இருக்காது. மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியை தரப் போகிறார்கள். அதிலும் தெளிவான அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மக்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஜெயலலிதா.

எத்தனை இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அதற்கு மே 13 வரை காத்திருங்கள் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு வாக்கு சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜெயலலிதா போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளுமே சென்னைக்கு வெளியிலேயே இருப்பதால் அவர் இதுவரை ஒரு முறை தான் போட்டியிட்ட தொகுதியில் வாக்களித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+