சிலியில் பிடிபட்ட காந்தஹார் விமானக் கடத்தல்காரன்-சிபிஐ, ஐபி குழு நேரில் ஆய்வு
டெல்லி: காந்தஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ராஃப் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து சிலி சென்றுள்ள சிபிஐ மற்றும் ஐபி குழுவினர் பிடிபட்டுள்ள நபர், தாங்கள் தேடும் ராஃப்தானா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
1999ம் ஆண்டு நேபாளத்திலிருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். ஆப்கானிஸ்தான் காந்தஹார் விமான நிலையத்தில் விமானத்தை நிறுத்தி வைத்து மிரட்டினர். இதையடுத்து அவர்கள் கோரியபடி மூன்று முக்கிய தீவிரவாதிகளை அப்போதைய பாஜக அரசு விடுவித்து விமான பயணிகளை மீட்டது.
இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி அப்துல் ராஃப். இவனது தலைக்கு சிபிஐ விலை வைத்திருந்தது. இந்த நிலையில்தான் சிலியில் வைத்து சிக்கியுள்ளான் ராஃப்.
இதையடுத்து பிடிபட்ட நபர் தாங்கள் தேடும் நபர்தானா என்பதை உறுதி செய்து கொள்ள சிபிஐ மற்றும் ஐபி அதிகாரிகள் குழு சிலி தலைநகர் சாண்டியாகோவுக்கு விரைந்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் ஐபி அதிகாரி ஒருவர் கூறுகையில், சிபிஐ, ஐபி அதிகாரிகளைக் கொண்ட குழு சிலி சென்றுள்ளது. அவர்கள் பிடிபட்டுள்ள நபர் குறித்து சிலி போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்த பணி திங்கள்கிழமைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் ராஃபை நாடு கடத்திக் கொண்டு வருவது குறித்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
போலி விசா மூலம் சிலிக்குள் நுழைந்ததாக தற்போது ராஃப் கைது செய்யப்பட்டுள்ளான். இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ராஃப் கைது செய்யப்பட்டான்.
ராஃபின் புகைப்படமோ அவனது கைரேகை உள்ளிட்டவையோ இதுவரை சிபிஐயிடம் இல்லை. இதுகுறித்து அமெரிக்காவின் உதவியை முன்பு கோரியிருந்தது சிபிஐ. ஆனால் அமெரிக்கா உதவவில்லை. ஆனால் அமெரிக்காவிடம் ராஃபின் புகைப்படம், கைரேகை உள்ளிட்டவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவால் தலிபான் தீவிரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மூவரில் ஒருவரான ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் அஸாரின் மச்சான்தான் இந்த ராஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த மசூத் அஸார், பாகிஸ்தானில் போய் செட்டிலாகி, அங்கு வைத்து ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைத் தொடங்கினான். இந்த அமைப்புதான் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தைத் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்களில் ராஃபும் ஒருவர் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications