ஈழத்து போரை இழித்தும், பழித்தும் பேசியது யார்? - ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி

இது தொடர்பாக, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவ அறிக்கை:
ஈழப் போரை பழித்தது யார்?
கேள்வி: இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்சுகி தருஸ்மேன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி மூன் அமைத்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் ஏடுகளில் வெளிவந்துள்ளனவே, அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?.
பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற விசாரணையின் அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக முழுமையும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டு மென்று பலரும் அறிக்கைகளை விட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்த விசாரணை ஆணையத்தை அமைத்த ஐ.நா. மன்றம் என்ன செய்யப்போகிறது என்றும் தெரியவில்லை. நமது மத்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்ற விவரமும் வரவில்லை. ஆனால் இதிலே அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா வழக்கம் போல தேவையில்லாமல் 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தில் நடைபெற்ற போது நான் உண்ணாவிரதம் இருந்ததை "கபட நாடகம்'' என்றும், மத்திய அரசின் மூலமாக தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை சென்று வந்ததை குறை கூறியும் ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் வெளிவந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் அடுக்கடுக்காக கொல்லப்பட்டபோது, "போர் என்றால் பொதுமக்களும் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஈழத்து இனப் போரினை இழித்தும் பழித்தும் ஜெயலலிதா கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் நினைப்பு! எது எப்படியோ? வருகிற 25-ம் தேதியன்று எந்தவிதமான திருத்தமும் இன்றி இலங்கை போர்க்குற்ற அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக அந்த அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப்பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
வீண் பரபரப்பு கிளப்பும் சுப்பிரமணிய சாமி
கேள்வி: ஜனதா கட்சி தலைவரான சுப்ரமணியன் சுவாமி 4 வெளிநாட்டுக்காரர்கள் அதாவது ஜெர்மனியிலிருந்து இரண்டு பேரும்-பிரிட்டனிலிருந்து ஒருவரும்-பிரான்சிலிருந்து ஒருவரும்-சென்னைக்கு வந்து இறங்கியிருப்பதாகவும்-அவர்கள் வாக்குப்பதிவான எந்திரங்களில் மாற்றம் செய்யப் போவதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?
பதில்: இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இதுகுறித்து விசாரித்து, மக்களுக்கு உண்மையை தேர்தல் ஆணையம் தெரிவிப்பதோடு, இந்தச் செய்தியில் தவறு இருக்குமாயின் அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி, அவர்களைப் பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையையாவது எடுக்க முன் வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் சர்வ வல்லமை உள்ளது என்பது உணரப்படும்.
முழு ஆதரவு
கேள்வி: தினமணி, எக்ஸ்பிரஸ் நாளேடுகளில் டாடா நிறுவனத்திற்கு ஏதோ குறைந்த விலையில் ஐ.ஐ.டி. நிறுவனத்துக்குரிய நிலத்தை கொடுத்து விட்டதாக பெரிய அளவில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டிற்கு சட்டப்பேரவையில் துணை முதல்வர் கடந்த ஆண்டிலேயே அளித்த பதிலை விவரமாக நீங்கள் தெரிவித்த பிறகும் அந்த பதிலை வெளியிட்டுள்ள தினமணியும், எக்ஸ்பிரசும் ஐ.ஐ.டி.க்கு சொந்தமான நிலத்தை அதன் அனுமதியில்லாமல் அரசு எப்படி கையகப்படுத்தியது என்பதைப் பற்றியோ, அரசுக்கு சொந்தமில்லாத நிலத்தை டாடாவுக்கு வழங்கியது பற்றியோ முதல்வர் காரணம் எதுவும் குறிப்பிட வில்லை என்று தெரிவித்திருக்கிறதே?.
பதில்: "ஐ.ஐ.டி.க்கு சொந்தமான நிலத்தை அதன் அனுமதி இல்லாமல் அரசு எப்படி கையகப்படுத்தியது'' என்பதைப்பற்றி நான் ஏன் கூறவில்லை என்று தினமணி கேட்டுள்ளது.
ஆனால் "தினமணி'' நாளிதழ் இந்த குற்றச்சாட்டை எழுதிய போது முதல் பாராவிலேயே "கடந்த 1993-ம் ஆண்டு சென்னை கிண்டியிலுள்ள ஐ.ஐ.டி. பெயரில் தரமணியில் உள்ள 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை தமிழக அரசு தன்னிச்சையாக கையகப்படுத்தியது'' என்று குறிப்பிட்டுள்ளது.
1993-ம் ஆண்டு ஆட்சியிலே இருந்தது "தினமணி''யின் முழு ஆதரவைப் பெற்றுள்ள அம்மையார் ஜெயலலிதாதான்.
'தப்பிலித்தனம்'
எனவே "தினமணி'' கேள்வி கேட்க வேண்டியது அ.தி.மு.க. தலைவியிடமாகும். அதுமாத்திரமல்ல, அவர்களின் அனுமதியில்லாமல் அரசு எப்படி கையகப்படுத்தியது என்று தினமணி கேள்வி கேட்க முடியாது. எந்த இடத்தையும், யாருடைய இடத்தையும் கையகப்படுத்த அரசுக்கு உரிமை உண்டு.
மேலும் தினமணி சாற்றியுள்ள குற்றச்சாட்டில், "கையகப்படுத்தப்பட்ட 40 ஏக்கர் நிலமும் உண்மையில் தங்களுக்கே சொந்தமானது என ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கே தெரியாது'' என்றும் குறிப்பிட்டதோடு, "சுமார் 11 ஏக்கர் நிலத்தைப் பெறுவதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் 6 ஆண்டுகள் வரை போராடியிருப்பதாகவும் தெரிகிறது, இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டில்தான் ஐ.ஐ.டிக்கு அந்த நிலம் கிடைத்திருக்கிறது'' என்றும் தினமணி எழுதியிருப்பதிலிருந்து - 2007-ம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியிலேதான் ஐ.ஐ.டி.க்கு அந்த நிலம் வழங்கப்பட்டது என்ற உண்மையும் தெளிவாகத் தெரிகிறது.
எனவே ஐ.ஐ.டி. நிலத்தை எடுத்து தி.மு.கழக ஆட்சியிலே டாடாவுக்கு தாரை வார்த்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறிருக்க "தினமணி'' நாளிதழ் "இந்த தாரைவார்ப்பு முறைகேட்டில் சம்மந்தப்பட்டிருப்பது அதிகாரிகள் மட்டும்தானா, இல்லை அரசியல்வாதிகளும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் கூடவா?'' என்று வேண்டுமென்றே பழிசுமத்தும் முயற்சியிலே ஈடுபட்டிருப்பது - எத்தகைய "தப்பிலித்தனம்'' என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டால் நல்லது.
உயர்நீதிமன்றம் Vs உச்சநீதிமன்ற தீர்ப்புகள்
கேள்வி: நீதிமன்றங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும், அதாவது உச்சநீதி மன்றம், உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் என்று தனித்தனியாக இருந்த போதிலும், நீதி ஒன்றுதான்! நேற்று உயர்நீதி மன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் தான் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் ஆகிறார்கள்.
நீதிக்கு கட்டுப்பட்டு, சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் எந்த நீதிபதிகளாக இருந்தாலும் தீர்ப்பு கூறுகிறார்கள். அவ்வாறிருக்க ஒரே வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றாகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வேறாகவும் இருக்கிறதே?.
பதில்: இந்த கேள்விக்கு விடையளிக்க நான் நீதிபதியோ, வழக்கறிஞரோ அல்ல! இருந்தாலும் இந்தக் கேள்வியின் நியாயத்தை உணருகிறேன். உதாரணமாக 1996-ம் ஆண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாவரசன் கொலை வழக்கிலே வழக்கு விசாரணை நடத்திய கடலூர் செசன்சு நீதிமன்றம் 10-3-1998 அன்று குற்றவாளி ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்து 2001-ல் தீர்ப்பளித்தது. ஆனால் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அவரை கைது செய்து சிறையிலே அடைக்க வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்காவிட்டால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டிருப்பார். ஆனாலும் கூட, 2001-ல் அதாவது பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலையான ஜான் டேவிட், தற்போது வெளிநாடு ஒன்றில் குடியுரிமை பெற்று தேவாலயத்தில் போதகராக இருப்பதாக ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது. தமிழகத்திலேயே தலைமறைவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஒரே வழக்கில் இரண்டு நீதி மன்றங்கள் 15 ஆண்டு காலம் வழக்கினை விசாரித்து அளித்த 2 தீர்ப்புகளை பற்றி கூறினேன்.
அரசியல் ரீதியாக ஒரு உதாரணம் கூறட்டுமா?
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருடைய பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பிறந்த நாள் பரிசாக வந்ததையொட்டி ஒரு வழக்கு சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்காக நிலுவையிலே இருந்து வருகிறது.
அந்த வழக்கிலே இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சி.பி.ஐ. நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவினை சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு-ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில்-சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா வருகிற மே 11-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு தடை பிறப்பிக்கக் கோரியும் - நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்களிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்திலே ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்து விட்ட போதிலும், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பதற்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜுன் திங்கள் 29-ந் தேதிக்கும் தள்ளி வைத்துள்ளது.
இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் நமது அண்ணா "சட்டம் ஒரு இருட்டறை - அதில் வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு'' என்று சொன்னார் போலும்! நான் இதைக் குறிப்பிடுவது யாரையும் குற்றஞ்சாட்ட அல்ல, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று எப்படி மாறுபடுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான்!.
-இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications