தேர்தல் கமிஷனிடம் இன்று அறிக்கை-மதுரை மேற்கு தொகுதியில் மறு தேர்தலா?
சென்னை: மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் பிடிபட்டது தொடர்பாக மதுரை கலெக்டர் அனுப்பிய விவரங்களை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை இன்று இந்திய தலைமைய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பபப்டவுள்ளது.
இத் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக எழுதி வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் சமீபத்தில் பிடிபட்டன. அதுகுறித்த அறிக்கை உரிய விவரங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டரிடம் இருந்து கடந்த புதன்கிழமை வந்தது. வாகன சோதனையின்போது ஆவணங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
மதுரை கலெக்டர் அனுப்பிய அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்துவிட்டோம். அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி விடுவோம். அதை தேர்தல் கமிஷனும் ஆய்வு செய்து, மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும்.
பழைய தலைமை செயலகத்தில் இருந்து புதிய தலைமை செயலகத்திற்கு அரசுத் துறைகளை மாற்றுகிறோம் என்ற பெயரில் ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசை கேட்டுள்ளோம்.
தபால் ஓட்டுகள் எத்தனை பதிவாகி உள்ளன என்று தற்போது எண்ணிக் கொண்டு இருக்கிறோம். தபால் ஓட்டுகளைப் பொறுத்தவரை, தபால் பிரிக்கப்பட்டிருந்தால் அந்த ஓட்டு செல்லுபடியாகாது. மறுதேர்தல் நடைபெற்ற 8 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம்' கதவின் சீல் உடைக்கப்பட்ட, அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உள்ளே வைத்து மீண்டும் அவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் கதவு சீலிட்டு மூடப்பட்டது. மற்ற அனைத்து இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முழு பாதுகாப்புடன் உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் என பல்வேறு வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர். அதற்கான படிவத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து, தமிழ்நாட்டில் அவரது பெயர் இடம்பெற்றுள்ள தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதைப் பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி, வெளிநாடு வாழ் இந்தியரின் (என்.ஆர்.ஐ.) பாஸ்போர்ட்டில் உள்ள முகவரிக்கு சென்று தகவல்களை சரிபார்ப்பார். அதன்பிறகு அவர் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார். அவ்வாறு அனுமதி கிடைத்தவர்கள், தேர்தல் நாளில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஓட்டுப்போடலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால், அதன்படி ஒருவர்கூட பதிவு செய்யவில்லை என்றார்.
துப்பாக்கி வெடித்தது குறித்து ஆய்வு:
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 13ம் தேதி எண்ணப்படுகின்றன. திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை மையமான விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரியில் உள்ள அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பணியில் தமிழ்நாடு சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரும் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சதீஷ்குமார் தனது பணியை முடித்து விட்டு போலீசார் தங்கும் அறைக்கு சென்றார்.
அவர் தனது கைத்துப்பாக்கியை மேஜை மீது வைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் டிரிக்கரில் அவரது கைவிரல் பட்டு விட்டது. உடனே துப்பாக்கியில் இருந்த ஒரு தோட்டா அந்த அறையின் கான்கிரீட் கூரையில் பாய்ந்தது.
இது குறித்து விருத்தாசலம் தேர்தல் அலுவலர் முருகேசன், உதவி தேர்தல் அலுவலர் சரவணன், டிஎஸ்பிக்கள் குப்புசாமி, மணி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications