ரிவர்ஸ் கியரில் போகிறதா தமிழ்நாடு??'-கருணாநிதி

எவர் போற்றினாலும், புகழ்ந்தாலும், புழுதிவாரித் தூற்றினாலும், பொருட்படுத்தாமல் போனாலும், நமது லட்சியப் பயணமும், தமிழகத்துக்கும், தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்குமான நமது பணிகளும், ஓய்வில்லா உழைப்பும் இன்று போல் என்றும் தொடரும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13.5.2006 அன்று ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், கடந்த ஐந்தாண்டு காலம் முழுவதும், என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்பதையே மூச்சாகக் கொண்டு, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கும் என்னென்ன பணிகள் ஆற்ற வேண்டுமென்று எண்ணி எண்ணிப் பார்த்து, மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது பாடுபட்டிருக்கிறோம்.
கடந்த 2006ம் ஆண்டு, திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
மக்களுக்கான மகத்தான பணிகளில் நாம் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டிருக்கும்போது; நமது மனதைச் சோர்வடையச் செய்து, கவனத்தை திசை திருப்பிடும் தீயநோக்கத்தோடு; ஆதிக்க சக்திகள் சில, நமது பணிகளின் சிறப்பையும், சாதனைகளின் தரத்தையும் வேண்டுமென்றே குறைத்தும், திரித்தும் மதிப்பிட்டு விமர்சனம் என்ற பெயரில், ஏடுகளிலும், ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள்.
அவற்றில், 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாளேடு ஒன்றில், ரிவர்ஸ் கியரில் போகிறது தமிழ்நாடு' என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையாகும். விமர்சனம் என்ற பெயரில், திமுக ஆட்சியின் பெருமையையும், புகழையும் சிதைத்துக் காட்ட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாகும். அந்தக் கட்டுரையில், திமுக அரசின் ஏழை எளியோருக்கான இலவச திட்டங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தமிழகத்தை ஒரு பின்தங்கிய மாநிலமாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுவது திமுக ஆட்சியில்தான், தமிழகத்தில் மட்டும்தான். திமுக ஆட்சியில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளியோர், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்புக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உள்பட உணவுப்பொருட்கள், மருத்துவ பாதுகாப்புக்கு, உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்; அவசர சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம்; வருமுன் காப்போம் திட்டம்; இளம்சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
உறையுள் பாதுகாப்புக்கு- மத்திய அரசின் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டம்; குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்கிடும் நோக்கில், கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் அனைத்துக் கிராமங்களிலும் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
1 கோடியே 58 லட்சத்து 82 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள். 28 லட்சத்து 34 ஆயிரம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்.
73 லட்சம் குழந்தைகள், மாணவ, மாணவியர்க்கு சத்துணவுடன் வாரம் ஐந்து நாட்களும் முட்டை, வாழைப்பழம். பள்ளிக்கல்வியிலும், கல்லூரி கல்வியிலும் ஏராளமான சலுகைகள். 4 ஆயிரத்து 20 திருக்கோயில்களில், 387 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 281 கோடியே 88 லட்சம் ரூபாய் சுழல்நிதி. 5 லட்சத்து 5 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தொண்டறம் பேணும் அமைப்புகளின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து, வேலை வாய்ப்பினை தேடித்தரும் முகாம்களை நடத்தியதன் மூலமாக, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்'. 1,929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் நிலுவைத் தொகை. இப்படி இந்த ஐந்தாண்டு காலத்தில் எண்ண எண்ண இனித்திடும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, சாதனைகள் படைத்திருக்கிறோம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் காரணமாகத்தான், 2005-2006ல் 61.17 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2010-2011ல் 96.08 லட்சம் டன்னாக உயர்ந்திருக்கிறது.
திமுகஅரசு ஏழை எளியோர்க்கு உதவிடும் வகையில் செயல்படுத்தி வரும் பொது விநியோகத் திட்டம், உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடுவழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயனாகவும், பொருளாதார வளர்ச்சியின் விளைவுகள் பரவலாக பலதரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. இதன் காரணமாகவும், 2005-2006-ம் ஆண்டில் 39 ஆயிரத்து 692 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம், 2009-2010-ம் ஆண்டில் 69 ஆயிரத்து 377 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களெல்லாம், தமிழ்நாடு, ரிவர்ஸ் கியரில்' பின்னோக்கி செல்வதையா காட்டுகிறது? சமூக, பொருளாதார நிலைகளில் வேகமாக முன்னேறி வருவதை அல்லவா காட்டுகிறது? இதனை மனசாட்சி உள்ளோர் நிச்சயமாக புரிந்து கொள்வர். திமுக ஆட்சியில், தமிழகம் எந்த அளவுக்கு அனைத்து முனைகளிலும் முன்னேறி வருகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள ஏதுவாக, அதுகுறித்து தகுதியுடையோர் விளக்கியதையும், உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களும், ஏடுகளும் எழுதியதையும் எடுத்துச்சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
9.4.2011 அன்று கோவையில் உரையாற்றிய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு நீண்டகால கண்ணோட்டத்துடன் செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்கள், தமிழகத்தை பல வழிகளிலும் - குறிப்பாக, ஊரக வளர்ச்சியிலும், வேளாண்மைச் சீரமைப்பிலும் - ஒரு மாதிரி மாநிலமாக மாற்றி அமைத்திருக்கிறது. அண்மையில் பொருளாதார நிபுணர்கள் சிலர் தயாரித்தளித்த அறிக்கை ஒன்றை பார்த்தேன். அந்த அறிக்கையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அறிவித்திருக்கிறார்கள்'' என்று பாராட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கிச் சொல்லியிருப்பது நம் அனைவருக்கும் நிறைவளிப்பது மட்டுமல்ல; நினைவிலே கொள்ளத்தக்கதுமாகும்.
சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனத்தின் சார்பில், 2010ம் ஆண்டில், தமிழ்நாடு- இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.
20 பெரிய மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி அடிப்படையிலான வரிசை பட்டியலில், தமிழ்நாடு மூன்றாம் இடம் பெற்றுள்ளதை ஒட்டி, 19.11.2010 அன்று புதுதில்லியில் நடந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் இந்தியா டுடே விருது' தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசு ஏழை எளிய மக்களிடையே வறுமையை ஒழிக்கவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், செயல்படுத்திவரும் திட்டமான வாழ்ந்து காட்டுவோம் திட்டம்'' குறித்து, உலக வங்கியின் முன்னாள் செயலாக்க தலைவர் திருமதி.மீனா முன்ஷி அனுப்பியுள்ள கடிதத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 2006-ம் ஆண்டின் இடைப்பகுதிக்கு பிறகு வேகமா செயல்படத் தொடங்கி, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திட்டம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மகத்தான வெற்றி கண்டுள்ளது'' என்றும் பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்ட செயல்பாட்டில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீதான விசாரணை மேற்கொண்டு அளித்த தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் தீபக் வர்மா மற்றும் பி.எஸ்.சவ்யான் ஆகியோர், இத்திட்ட செயலாக்கத்தில் தமிழ்நாடு மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்கள் அதிக அக்கறையுடன் செயல்படுவதாக பாராட்டி, மற்ற மாநிலங்களும் இவ்விரு மாநிலங்களின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி திறம்பட செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மதிப்பீடுகளையெல்லாம் கண்ட பிறகாவது, ஏனோ தானோ என்று விமர்சனம் செய்து, திமுக அரசின் செயல்திறனையும், மக்கள் நலப்பணிகளையும், சாதனைகளையும் இன்னமும் குறைத்து மதிப்பிடுவோர்; தமது அணுகுமுறையை திருத்திக்கொண்டு, ஆத்திரத்தையும், அலட்சியத்தையும் குறைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
எவர் போற்றினாலும், புகழ்ந்தாலும்; புழுதிவாரித்தூற்றினாலும், பொருள்படுத்தாமல் போனாலும்; நமது இலட்சியப் பயணமும், தமிழகத்துக்கும்-தமிழ் மொழிக்கும்-தமிழர்களுக்குமான நமது பணிகளும், ஓய்வில்லா உழைப்பும், இன்றுபோல் என்றும் தொடரும்!
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications