பாக். ராணுவ செக் போஸ்ட் மீது யுஎஸ் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்

தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நேடோ படையின் அமெரிக்கப் பிரிவினர், ஆப்கானி்ஸ்தான் எல்லையான வடக்கு வசீர்ஸ்தான் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ செக்போஸ்ட் மீது தாக்குதல் நடத்தினர்.
ஹெலிகாப்டர்கள் குண்டு மழை வீசியதில் இரு பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர்.
ஹெலிகாப்டர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் தான் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக நேடோ கூறியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பாகிஸ்தான் ராணுவத்தினர் என்றும் உறுதியாகியுள்ளது.
மிரான்ஷா என்ற இடத்தில் வச்சா பிபி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ செக் போஸ்டுகள் இருந்தாலும் அந்த மாகாணம் முழுக்க முழுக்க பழங்குடியினத்தினரின் ஆட்சியில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் நாட்டு சட்ட திட்டங்கள் செல்லுபடியாவதில்லை. அது ஒரு சுயேச்சையான மாகாணமாகும்.
இதனால் இப் பகுதி தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமாவை கடந்த 2 ம் தேதி அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் அரசுக்கே தெரிவிக்காமல் தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
சிதைந்த ஹெலிகாப்டரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பாகிஸ்தான்:
இதற்கிடையே ஒசாமாவுக்கு எதிரான தாக்குதலின்போது சேதமடைந்ததால் அங்கேயே விட்டுச் செல்லப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவுள்ளது பாகிஸ்தான்.
இத்தகவலை தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
ரேடாரிலிருந்து தப்பும் தொழில்நுட்பம் கொண்ட அந்த ஹெலிகாப்டரை சீனாவிடம் பாகிஸ்தான் வழங்கிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவிடம் உள்ளது. அந்தத் தொழில்நுட்ப ரகசியத்தை சீனா அறிந்து கொள்ளும் என்ற பயத்தில் உள்ள அமெரிக்கா, அதை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் கோரி வந்தது.
இந்தியாவை மிகப்பெரிய எதிரியல்ல-நவாஸ் ஷெரீப்:
இந் நிலையில் இந்தியாவை மிகப்பெரும் எதிரியாக கருதி செயல்படுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அந் நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
சிந்து மாகாணத்தில் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில் அபோட்டாபாத்தில் அத்துமீறி நுழைந்து ஒசாமா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டுபிடித்து, அமெரிக்கப் படைகளைத் தடுக்கத் தவறியவர்களை தண்டிக்க வேண்டும்.
அதுபோன்று மற்றும் ஒரு தாக்குதலை பாகிஸ்தான் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications