எனக்கு எதிராக சதி: ராம்தேவ் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: கறுப்புப் பணத்துக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ள யோகா குரு பாபா ராம்தேவ், தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் கூறியுள்ளார்.
அவரது உண்ணாவிரதத்தைக் கைவிட வைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்றும் தோற்றுவிட்டது. இன்று காலை திட்டமிட்டபடி அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவக்கினார். முன்னதாக நேற்று மாலை காந்தி சமாதிக்குச் சென்று அஞ்சலியும் செலுத்தினார்.
இந் நிலையில் இன்று காலை தனது ஆதரவாளர்களிடையே பேசிய பாபா, எனக்கு எதிராக சதி நடக்கிறது என்றார். ஆனால், அது குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்ட அவர், அது குறித்து சரியான நேரத்தில் விளக்குவேன் என்றார்.
மேலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்க வரலாம், ஆனால் மேடையில் வந்து அமரவோ, அதன்மூலம் எனக்கு அரசியல் சாயம் பூசவோ முயலக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பாபாவின் போராட்டத்துக்கு ஆதரவாக பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மக்கள் கூடி மெழுகுவர்த்திகளை ஏந்தியும், உண்ணாவிரதம் அமர்ந்தும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆதரவு வரும் நாட்களில் மேலும் பெருகும் என்பதால் மத்திய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டுள்ளது. இதையடுத்து பாபாவின் பெயரைக் கெடுக்க ஏதாவது வழி இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தான் பாபா, தனக்கு எதிராக சதி நடப்பதாகக் கூறுவதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் தனது அறக்கட்டளையின் சொத்துக்கள், பணம் வந்த வழி, வரும் வழி ஆகிய அனைத்து விவரங்களையும் மக்கள் முன் சமர்பிக்க ராம்தேவ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்று ஜந்தர்மந்தரில் பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாடுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications