ஊழலுக்கு எதிரான ராம்தேவின் உண்ணாவிரதம்-ஆதரவாளர் கூட்டம் பெருகுகிறது

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ஊழலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ராம்தேவ் அறிவித்தார்.
இதை ஆரம்பத்தில் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் ராம்தேவின் போராட்ட அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆதரவும் பெருகியது. இதையடுத்து விழித்துக் கொண்ட மத்திய அரசு ராம்தேவுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்கியது. வரலாறு காணாத வகையில் மூத்த அமைச்சர்களை ராம்தேவ் இருப்பிடத்திற்கே சென்று பேச வைத்தது.
இருப்பினும் ராம்தேவின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்ததால் பேச்சுவார்த்தையில் பயன் ஏதும் ஏற்படவில்லை. நேற்று இரவு கூட கடைசிக் கட்ட முயற்சியாக ராம்தேவை சந்தித்து அமைச்சர்கள் பேசினர். இருந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இன்றுகாலை திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ராம்தேவ். இதற்காக நேற்றே ஆயிரக்கணக்கானோர் ராம் லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர். இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
4.50 மணிக்கு தொடங்கியது:
காலை 4.50 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு ராம்தேவ் வந்தார். அவருடன் இந்து துறவிகள் சிலரும் வந்தனர். சங் பரி்வார் அமைப்பைச் சேர்ந்த சாத்வி ரிதம்பரா, இஸ்லாமிய, சீக்கிய, ஜைன மதத் தலைவர்களும் அவருடன் வந்தனர்.
அதன் பின்னர் யோகாசனத்தை நிகழ்த்தினார் ராம்தேவ். மேலும் பக்திப் பாடல்கள், பஜன் பாடல்கள் இசைக்கப்பட்டன.
பின்னர் ராம்தேவ் கூட்டத்தினரிடையே பேசினார். நகைச்சுவை கலந்தும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசினார். பல யோகாசனங்களையும் அப்போது அவர் செய்து காட்டினார்.
ராம்தேவ் பேசுகையில், நம்மால் முடியாதது ஏதும் இல்லை. எல்லாமே சாத்தியமானதுதான். நாம் தோல்வி அடையப் போவதில்லை. இந்த நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து மீட்க வேண்டும். ஏழைகளிடமிருந்து பசியையும், பட்டினியையும், பஞ்சத்தையும் விரட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இங்கு கூடியிருக்கும் யாரும் காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவர்கள் இல்லை. அனைவரும் தாங்களாகவே வந்துள்ளனர். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள்தான் இங்கு கூடியுள்ளனர். இந்த போராட்டம் வெல்லும் என்றார்.












Click it and Unblock the Notifications