ராம் தேவ் கைதுக்குப் பொறுப்பேற்று பிரதமர், மத்திய அரசு பதவி விலக வேண்டும்-சாந்திபூஷன்
டெல்லி: மக்களைப் பாதிக்கும் ஊழல் பிரச்சினைக்கு முடிவு கட்டக் கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வன்முறை மூலம் கலைத்த செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அதேபோல மத்திய அரசும் தார்மீகப் பொறுப்பேற்று விலக வேண்டும் என்று ஊழலுக்கு எதிராக போராடி வரும் குழுவில் ஒருவரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன் வலியுறுத்தியுள்ளார்.
ராம்தேவ் கைது செய்யப்பட்ட விதத்திற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழலை எதிர்த்து வரும் மக்கள் போராட்டத்தை மிகவும் நியாயமற்ற முறையில் முறியடித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் மக்கள் இயக்கத்திற்கும், அரசுக்கும் இடையிலான சுமூக உறவு முறிந்து போய் விட்டது.
இதற்குப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது தலைமையிலான அரசும்தான் பொறுப்பு. உடனடியாக இருவரும் பதவி விலக வேண்டும். இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கானோரை, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது, வேதனை தருகிறது.
எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைப் போல தற்போதைய அரசு நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் ராம்தேவ் எப்படி பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவருடைய அணுகுமுறைகளை நான் ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் ஊழலுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தினார். அதை நான் ஆதரிக்கிறேன். அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை இப்படிக் கலைத்திருப்பது சட்டப்படியும் சரியில்லை என்றார் பூஷன்.
சமீப காலமாக நாடு முழுவதும் எழுந்திருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்களை, அமைப்புகளை, குரல்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருபவர் சாந்தி பூஷன். ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் சார்பாகத்தான் சில மாதங்களுக்கு முன்பு காந்தியவாதி அன்னா ஹஸாரே டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications