பர்னாலா ஓய்வு பெறுகிறார்: அடுத்த கவர்னர் மார்க்ரெட் ஆல்வா?

அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் இப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு தரப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
1989ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் பர்னாலா. அடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமரானவுடன் ராஜிவ் காந்தி-ஜெயலலிதாவின் நெருக்குதலின்பேரில் திமுக ஆட்சியைக் கலைக்க பரிந்துரைக்கப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி, ஆட்சியைக் கலைக்க பரிந்துரைக்குமாறு சந்திரசேகர் அரசு, பர்னாலாவுக்கு நெருக்கடி தந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளுநரை மாற்றிவிட்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன்.
இந் நிலையில் மத்தியில் திமுக ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், பர்னாலாவை மீண்டும் ஆளுநராக நியமிக்க வைத்தார் கருணாநிதி.
கடந்த 3.11.2004 அன்று சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக கவர்னர் பொறுப்பை ஏற்றார். அவரது பதவிக் காலம் முடிந்தபோதும், 20.6.2006 அன்று மீண்டும் 5 ஆண்டுகளுக்கு தமிழக கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவிக் காலம் வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவுடன் மோதலில் உள்ள காங்கிரஸ் அவருக்கு மீண்டும் பதவி நீடிப்பு தரும் மனநிலையில் இல்லை. விரைவில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் உள்ள காங்கிரஸ் அதற்கேற்ப, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமான ஒருவரை ஆளுநராக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி தற்போது உத்தரகாண்ட் மாநில கவர்னராக இருக்கும் மார்க்ரெட் ஆல்வா தமிழக கவர்னராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த இவர் மத்தியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடையே நடந்த மோதல் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து சோனியாவால் ஒதுக்கி வைக்கப்பட்டார். இவர் இப்போது உத்தரகாண்ட் மாநில ஆளுநராக உள்ளார்.
இவரை தமிழக கவர்னராக நியமித்தால் அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்கு ஒத்துப்போகும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இருவரும் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்தபோது நல்ல தோழிகளாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்தப் பதவிக்கு நவீன் சாவ்லாவின் பெயர் அடிபட்டது. தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோதே காங்கிரசுக்கு ஆதரவானவர் என்று பெயர் எடுத்த இவர் ஓய்வு பெற்றுவிட்டார். இந் நிலையில் அவரது காங்கிரஸ் ஆதரவு நிலைக்கு பரிசாக ஆளுநர் பதவியளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அவர் தமிழக ஆளுநராகலாம் என்றும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications