சாப்ட்வேர் என்ஜீனியர் கடத்திக் கொலை-மாமனார் உள்பட 5 பேர் கைது
சென்னை: சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற சாப்ட்வேர் என்ஜீனியரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் அவருடைய மாமனார், மாமனாரின் தோழி உள்பட ஐந்து பேரை விழுப்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்தசாதரி. சாப்ட்வேர் என்ஜீனியர்.சாதாரண டெய்லர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரம்பூரைச் சேர்ந்தவர் சரண்யா. தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
இருவரும் காதலித்தனர். இந்தக் காதலுக்கு பார்த்தசாரதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சரண்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி பார்த்தசாரதியை கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார் சரண்யா. அதன் பின்னர் 23ம் தேதி ரிசப்ஷனும் நடத்தினர். இதையடுத்து பார்த்தசாரதி வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினார் சரண்யா.
இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற பார்த்தசாரதி வீட்டுக்கு வரவில்லை. இதனால் சரண்யா,சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சரண்யா. ஆனால் சென்னை போலீஸ் தரப்பில் இதுகுறித்து சரிவர விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், திண்டிவனம் அருகே ஒலக்கூர் என்ற இடத்தில் பாலத்தின் கீழ் பார்த்தசாரதியின் எரிந்து போன உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை பார்த்தசாரதிதான் என்று அவருடைய மனைவியும், குடும்பத்தினரும் அடையாளம் காட்டினர்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட வடக்கு மண்டல ஐஜி சைலேந்திர பாபு, இந்தக் கொலை தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அவரது உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சேவியர் தன்ராஜ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் தற்போது குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி. சேவியர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த 4-ந் தேதி திண்டிவனம் ஓங்கூர் பாலம் அருகே 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு வாலிபரின் பிணம் முகம் மற்றும் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் தலைமுடியை வைத்து சென்னையில் காணாமல் போன என்ஜினீயர் பார்த்தசாரதிதான் இறந்தவர் என்று அடையாளம் தெரிந்தது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பார்த்தசாரதியும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த நரசிம்மன் மகள் சரண்யாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை சரண்யாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவருடன் சரண்யாவிற்கு நிச்சயம் செய்தனர்.
இந்நிலையில் சரண்யா பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தசாரதியை காதல் திருமணம் செய்து கொண்டார். நரசிம்மன், தனது ஒரே மகள் வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டது பற்றி,தன்னுடன் நெருங்கிய தொடர்பு உடையவரும் திருமண தகவல் மையம் நடத்துபவருமான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விதவைப்பெண் சலுஜாவிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சலுஜாவும், நரசிம்மனும் சலுஜாவிற்கு தெரிந்தவர்களான சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த நந்தகோபால் மகன்கள் ஜானகிராமன் (25), ஹேமந்த்ராம் (20) மற்றும் வில்லிவாக்கம் ரெட்டி தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜெயக்குமார் மகன் திலீப் (25) ஆகியோருடன் சேர்ந்து சரண்யாவிடம் இருந்து பார்த்தசாரதியை பிரிப்பது அல்லது கொலை செய்துவிடுவது என திட்டம் தீட்டினர்.
பலமுறை பார்த்தசாரதியிடம், சரண்யாவைவிட்டு சென்றுவிடு என செல்போன் மூலம் மிரட்டி உள்ளனர். ஆனால் பார்த்தசாரதி அதற்கு செவி சாய்க்கவில்லை. இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் செய்யவில்லை.
இந்நிலையில் கடந்த 2-ந் தேதி வேலைக்கு சென்ற பார்த்தசாரதியை காணவில்லை என்று அவரது மனைவி சரண்யா சிந்தாதிரிப்பேட்டை போலீசில் 3-ந் தேதி புகார் செய்தார். 4-ந் தேதி காலை திண்டிவனம் ஓங்கூர் அருகே பிணம் கைப்பற்றப்பட்டு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7-ந் தேதி காலை அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் தலைமுடி ஆகியவைகளை வைத்து அடையாளம் காண முடிந்தது.
மேலும் பார்த்தசாரதியின் செல்போனை தொடர்பு கொண்டவர்களை வைத்தும் விசாரணை செய்தோம். விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்தன. நரசிம்மன், சலுஜா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கூலிப்படையைச் சேர்ந்த ஜானகிராமன், ஹேமந்த்ராம், திலீப் ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து பார்த்தசாரதியை கடத்திச் சென்றுள்ளனர்.
சென்னையில் இருந்து தொழுதூர் வரை சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சென்னை நோக்கி திரும்பினர். எவ்வளவோ மிரட்டியும் பார்த்தசாரதி, சரண்யாவை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜானகிராமன், ஹேமந்த்ராம், திலீப் ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு பார்த்தசாரதியை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் எங்கு பிணத்தை போடுவது என்று இடத்தினை தேர்வு செய்து, இருட்டியவுடன் ஓங்கூர் பாலம் அருகே பார்த்தசாரதியின் பிணத்தை கீழே போட்டு அடையாளம் தெரியாதவாறு முகம் மற்றும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.
இந்த கொலைக்கு கூலியாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கைதானவர்களில் ஒருவரான திலீப் என்பவர் கார் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் நரசிம்மன், ஜானகிராமன், ஹேமந்த்ராம், திலீப், சலுஜா ஆகிய 5 பேர் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications