பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: சோனியாவுடன் சந்திப்பில்லை

அதே நேரத்தில் நேற்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள முதல் முக்கிய காங்கிரஸ் தலைவர் ஷீலா என்பது குறிப்பிடத்தக்கது. அதை விட முக்கியமாக, சோனியாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஷீலாவும் ஒருவர். எனவே இந்த சந்திப்புக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
திமுகவுடன் உறவு தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் ஜெயலலிதாவுடனான சந்திப்பை சோனியா தவிர்த்திருந்தாலும் அவர் சார்பில் தான் ஜெயலலிதாவை ஷீலா சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அங்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஜெயலலிதாவை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வந்து சந்தித்தனர். அதில் முக்கியமானவர் ஷீலா தீட்சித்.
தமிழ்நாடு இல்லம் வந்த ஷீலா தீட்சித், ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது, இது கர்ட்டசி கால் (மரியாதை நிமித்தமான சந்திப்பு). முதல்வராகப் பதவியேற்றதற்காக ஜெயலலிதாவுக்கு வாழ்தது தெரிவித்தேன் என்றார் ஷீலா.
அதற்கு மேல் செய்தியாளர்கள் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டார் ஷீலா. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா கூறினாலும் கூட சோனியா சார்பாகத்தான் ஷீலா வந்து சந்தித்திருப்பதாக கருதப்படுகிறது.
ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தின்போது சோனியாவை அவர் சந்திக்கக் கூடும் என்று பேச்சு நிலவி வந்தது. ஜெயலலிதாவுக்கு டீ-பார்ட்டி தர சோனியா திட்டமிட்டுள்ளதாக வட இந்திய மீடியாக்கள் தேர்தல் முடிவுகள் அன்றே கதை கட்டிவிட்டன. ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
இதேபோல பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், சிபிஐ தேசியச் செயலாளர் ராஜா ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
சந்திப்பு குறித்து ராஜா கூறுகையில், ஜெயலலிதாவுடனான சந்திப்பின் போது அரசியல் பற்றி பேசவில்லை. மின்சார பற்றாக்குறையாலும், கடன்சுமையாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் ஜெயலலிதாவுக்கு பாரதீய ஜனதா சார்பில் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது டெல்லி வரும் போது சந்திப்பதாக தெரிவித்தார். அதன்படி இந்த சந்திப்பு நடைபெற்றது என்றார்.
பிரதமருடன் சந்திப்பு-ஜெவுக்காக வந்த பிரதமர் அலுவலக கார்:
இந் நிலையில் இன்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதாவை அழைத்துவர பிரதமர் அலுவலகத்தில் இருந்து புல்லட் புரூப் செய்யப்பட்ட டாடா சபாரி கார் ஒன்று தமிழ்நாடு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் வழக்கமான சோதனைகள் ஏதும் செய்யாமல் அந்தக் கார் பிரதமரின் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டது.
பிரமதருடனான சந்திப்பின்போது, தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் தர வேண்டும், உரப் பற்றாக்குறையை தீர்க்க உதவ வேண்டும். ரேஷனில் வழங்குவதற்காக 65,140 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகளை ஜெயலலிதா முன் வைத்தார்.
மேலும் தமிழகத்திற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தமிழக அரசின் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரினார்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதல் குறித்தும் முக்கியமாக ஜெயலலிதா விவாதித்தார். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் ஒன்றையும் அவர் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்து முக்கியமாக பிரதமருடன் அவர் விவாதித்ததாகத் தெரிகிறது.
பிரதமரை சந்தித்து முடித்த பின்னர் தமிழ்நாடு இல்லம் வந்த ஜெயலலிதா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை வாழ் தமிழர்கள் நலன் மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் நலன் குறித்தும் பிரதமரிடம் பேசினேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், கச்சத்தீவு உரிமை குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்துள்ளேன்.
தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்கிட பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். இரு மாநில பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்க்க மத்திய அரசு துணை புரிய வேண்டும். முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை கடுமையாக எதிர்ப்போம், அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம் என்றார்.
அதிமுக எம்பிக்களுடன் ஆலோசனை:
முன்னதாக இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஜெயலலிதா இன்றே சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications