தேர்தலில் மோசடியாக வென்று நாட்டை ஏமாற்றியவர் ப.சிதம்பரம்: ஜெயலலிதா தாக்கு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
டெல்லி: எனது ஆதரவு தேவையென்றால் அதை அவர்கள் தான் கேட்க வேண்டும். திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று வரை தொடர்ந்து வருவதால் தான் சோனியா காந்தியை நான் சந்திக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்ற ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசுடன் இணக்கமான உறவு கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசுடன் மோதல் போக்கை கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

2ஜி வழக்கு விசாரணையில் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதால் நான் இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி்க்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால் அவரை அமைச்சரவையிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும்.

திமுக செய்த சாதனையெல்லாம், நாட்டின் பணத்தை கொள்ளையடித்தது தான். கடந்த ஆட்சியில் திமுகவினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தனர். தான் செய்த தவறுகளுக்கான விலையை திமுக இப்போது கொடுத்துக் கொண்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் வெல்லவே இல்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அவரை அதிமுக வேட்பாளர் தோற்கடித்தார். ஆனால், மோசடி செய்து தான் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தில்லு-முல்லு செய்து நாட்டை ‌ஏமாற்றினர். சிவகங்கையில் உண்மையிலேயே வெற்றி பெற்றது அதிமுக வேட்பாளர்தான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும்.

இன்றைய தேதி வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டுள்ளது. இதனால் நான் சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் தான் சந்திக்கவில்லை என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தீர்களே என்று கேட்டதற்கு, அப்போது இருந்த நிலையில் அவ்வாறு கூறியிருந்தேன். ஆனால் திமுக- காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருகிறது. எனவே காங்கிரசுக்கு ஆதரவு தருவது பற்றிய கேள்வி எழவில்லை. காங்கிரஸ் தரப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையும்படி யாரும் என்னிடம கேட்கவில்லை. எனது ஆதரவு தேவையென்றால் அவர்கள் தான் வந்து கேட்க வேண்டும் என்றார்.

அன்னா ஹசாரேவின் போராட்டம் குறித்து கேட்டதற்கு, ஜனநாயகத்தில் ஊழலை எதிர்த்துப் போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், புதிய தலைமை செயலகத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், அலுவலகம் ஒருபுறம், அமைச்சகம் ஒருபுறம் என்று செயல்படுவது சிரமமான காரியம். எனவே பழைய தலைமை செயலகத்தில் செயல்படுகிறோம்.

தமிழ்நாட்டில் எனது முந்தைய ஆட்சியின் போது (2001-06) மின்வெட்டே இல்லாத நிலை இருந்தது. 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டது. மின் உற்பத்தி அதிகரித்து உபரி மின்சாரம் பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

2006ம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு மின்சார நிலையிலும் அடியோடு மாற்றம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக மின் தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து மின்வெட்டு நிலவியது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், விவசாயம் மோசமாக பாதிக்கப்பட்டது. வீடுகளுக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை.

மின் உற்பத்தியும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு 10,000 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 7,000 மெகாவாட் மின்சாரம் தான் தயாரிக்கப்பட்டது. பெரும் ஊழல் காரணமாக மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்கியது. இதற்கு இந்தோனேஷியாவிலிருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததுதான் காரணமாகும். ஆனால் தரக்குறைவான நிலக்கரியை மிக அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலம் கமிஷனும் கைமாறி உள்ளது.

மின்சார உற்பத்தி குறைந்ததால் வெளி மாநிலங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் 15 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது.

மின்சார பற்றாக்குறையை அடியோடு போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த 3 வாரங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மின் தட்டுப்பாட்டை குறைத்திருக்கிறோம். மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று நிலையங்கள் திமுக ஆட்சியின் போது மூடப்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு சமயத்தில் ஒரு நிலையத்தை பராமரிப்புக்காக மூடுவதன் மூலம் மின் உற்பத்தியை சீராக்கியிருக்கிறோம்.

10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ஏற்கனவே மத்திய அரசு சில திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இன்னும் பணி ஆரம்பிக்கவில்லை. அந்த பணிகளை துவக்கி 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

தற்போதைய சூழ்நிலையில் தற்காலிக நடவடிக்கையாக ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்று பிரதமரை சந்தித்த போது இதனை வலியுறுத்தினேன். அவரும் இதனை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

அதே போல தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்றார் ஜெயலலிதா.

தி்முக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் டெல்லி வந்த ஜெயலலிதாவை சோனியா சந்திக்காமல் தவிர்த்ததற்கும் சிதம்பரம் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

இதனால் தான் அவர் மீது ஜெயலலிதா பாய்ச்சல் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்கள் டெல்லி வருகை காரணமாக திமுக, அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ஜெயலலிதா நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், இது குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. திமுக கவலை அடைந்திருப்பதாக நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அணி மாற்றம் ஏற்படும் என்று முன்கூட்டி கருத்து கூற இயலாது என்றார்.

மேலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்குகள் எதுவும் என்னாலோ அல்லது எனது கட்சியாலோ தொடங்கப்படவில்லை. அவை அனைத்தையும் செய்தது மத்திய அரசு. எனவே இத்ல் பழிவாங்கும் செயல் என்ற கேள்விக்கே இடமில்லை. திமுகவுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தொடர நான் எந்த நிர்பந்தமும் செய்யவில்லை. திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்ற கேள்விக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளன. அனைத்து மட்டங்களிலும் ஊழல், மோசமான நிர்வாகம், ஆட்சியின் அனைத்து பிரிவுகளிலும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம். கருத்து சுதந்திரம் பறிப்பு போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது உகாண்டாவின் இடி அமின் ஆட்சியில் இருப்பதுபோல மக்கள் உணர்ந்தனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+