இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு
சென்னை: தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடக்க விழாவை புறக்கணித்தற்காக தமிழக அரசை சீமான் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தமிழர்களை கொன்றுக் குவித்துவிட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கிவிட்டு வெளியில் இருந்து யாரும் அரசியல் தீர்வு பற்றி வற்புறுத்து முடியாது என்று திமிராக பேசிவருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.
சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக்கூடிய தீர்வை உருவாக்குமாறு பெயரளவில் விடுத்த கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய நாளிதழ்களிலும் கூட வந்துள்ளது.
'தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன" என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டுவரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.
ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுவதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலிகொண்டு வரும் சிங்கள பெளத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.
தமிழினத்திற்கோ, தமிழ்நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்துவந்த வணிக வரிச் சலுகைகளை (ஜி.எஸ்.பி.+) (2) நிறுத்திவிட்டது. மனிதாபிமானத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் கையாண்ட பொருளாதாரத் தடையால் 2 லட்சம் சிங்களர்கள் வேலையை இழந்தனர்.
ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது.
அதுமட்டுமல்ல இலங்கையிடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகிவிடும், அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகிவிடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது. கருப்பர் இன மக்களை ஒடுக்கி வந்த இனவெறி தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பில் இருந்து கிரிக்கெட் புறக்கணிப்பு வரை அத்தனை அரசியல் புறக்கணிப்பு வழிகளையும் கையாண்ட இந்திய அரசு, அன்றைக்கு இப்படிப்பட்ட அரசியல் சால்சாப்புகள் எதுவும் கூறவில்லை.
ஆனால் இலங்கை பிரச்சனையில் மட்டும் தொடக்கத்தில் இருந்தே தமிழின விரோதப் போக்கை இந்திய மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அதுதான் கப்பல் போக்குவரத்திலும் வெளிப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம் தமிழக அரசு நிறைவேற்றிய பொருளாதாரத் தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது.ஆனால் தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இணங்க, கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்துள்ளது.
முந்தைய அரசு போல் பெயருக்குத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு தமிழர்களை ஏமாற்றும் போக்கை இந்த அரசு கடைபிடிக்கவில்லை. தமிழக அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ தொடக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாகவுள்ளதை இந்த புறக்கணிப்பு நிரூபிக்கிறது.
தமிழக அரசின் புறக்கணிப்பு நடவடிக்கை தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகும். பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம். இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம், இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும்.
இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications