டீசல் ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ.75 உயரும்?

பெட்ரோல் விலையை மட்டும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரத்தை கடந்த ஆண்டு ஜுன் மாதம் மத்திய அரசு அளித்தது. அதன் பிறகு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் 10 முறை விலையை உயர்த்திவிட்டன. கடைசியாக கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.5 வரை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
ஆனால், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே இருந்து வருகிறது. விலை நிர்ணயம் குறித்த முடிவெ மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு கடைசியாக கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் அந்த குழு கூடியது. அப்போது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 3ம் உயர்த்தப்பட்டன.
அப்போது, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 72 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது, 111 அமெரிக்க டாலராக உயர்ந்து விட்டது.
இதனால் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று பல மாதங்களாகவே பெட்ரோலியத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் ஆகிய மற்ற பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1.66 லட்சம் ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் விற்பனையால் லிட்டருக்கு ரூ.15.44ம், மண்ணெண்ணெய் விற்பனையால் லிட்டருக்கு ரூ.27.47ம் சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.381ம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த இழப்பில் 3ல் 1 பங்கை மக்கள் மீது சுமத்துமாறும், இன்னொரு பங்கை மத்திய அரசு மானியமாகவோ அல்லது கடனாகவோ அல்லது வரிக் குறைப்பு மூலமாகவோ ஏற்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
இந் நிலையில் இன்று முகர்ஜி தலைமையில் நடக்க இருந்த பெட்ரோலியத்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. சில அமைச்சர்கள் டெல்லிக்கு வந்து சேராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
ஆனாலும் மிக விரைவிலேயே விலை உயர்வு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரையும், சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 முதல் ரூ. 75 வரையும் வரையும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் கச்சா எண்ணெய் மீது தற்போது விதிக்கப்படும் 5 சதவீத சுங்க வரியை ரத்து செய்வது குறித்தும், டீசல் மீதான சுங்க வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பது குறித்தும், கலால் வரியையும் கொஞ்சம் குறைப்பது குறித்தும் மத்திய அரசு யோசித்து வருகிறது.
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் ரூ. 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications