இலங்கை கடற்படையால் கடத்தப்பட்ட 23 தமிழக மீனவர்களும் ஜூலை 1ல்தான் விடுதலை?
கொழும்பு: கைது செய்யப்பட்டு மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான முடிவை இன்று இலங்கை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூலை 1ம் தேதிதான் அதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்து விட்டது.
இதனால் 23 தமிழக மீவர்களும் தாயகம் திரும்புவது தள்ளிப் போயுள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 தமிழக மீனவர்களையும், அவர்களின் 5 படகுகளையும் சிறை பிடித்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மன்னார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மீனவர்களும் காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மத்திய அரசு, இலங்கைக்கு நெருக்குதல் கொடுத்தது. இதன் விளைவாக 23 பேரும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அறிவித்தது.
இந்த நிலையில் இன்று மீனவர்களின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூலை 1ம் தேதிதான் இதுகுறித்து முடிவு அறிவிக்கப்படும் என திடீரென இலங்கை கூறியுள்ளது.
23 மீனவர்களும் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை ஜூலை 1ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் அன்றுதான் அவர்களை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என இலங்கை காரணம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications