கூடன்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாகத் தான் உள்ளதா?
நெல்லை: கூடன்குளம் அணுமின் நிலையத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிக்கு சேர்ந்த உபி வாலிபர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நெல்லை கூடன்குளத்தில் இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.14 ஆயிரம் கோடியில் 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலை மூலம் விரைவில் மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
அணுமின் நிலைய கட்டுமான பணி முழுவதும் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 120 கான்டிராக்டர்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதம் பேர் தமிழகத்தையும், 30 சதவீதம் பேர் வட மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் உபி மாநிலத்தைச் சேர்ந்த முகமது மீரா கான் என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை கண்காணித்தனர். அப்போது அவர் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபத் பஸ்வான் என்று போலி பெயர் மற்றும் முகவிரியில் பணியில் சேர்ந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கூடன்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கூடன்குளம் கான்டிராக்ட் பணியில் சேருவதற்கு குமரி மாவட்டம் அஞ்சி கிராமம் அருகே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ரகுநாத் என்பவர் போலி அடையாள அட்டை தயாரித்து வழங்கியது தெரிய வந்தது.
அவரது கம்யூட்டர் சென்டரில் சோதனை நடத்திய வள்ளியூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரகுநாத்தை நேற்று கைது செய்தனர். அந்த கம்யூட்டர் சென்டரில் பல அடையாள அட்டைகளும், உயர் அரசு அலுவலர்கள் பலரின் கையெப்பங்கள் ஸ்கேன் செய்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. அங்கிருந்த கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார் ரகுநாத் மீது இந்திய தண்டனை சட்டம் 419, 268, 271 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூடன்குளம் அணுமின் நிலையம் மத்திய தொழில் படையினரின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அணு மின் நிலையம் ரகசியம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இங்கு போலி முகவரி கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாக ஒருவர் பணியாற்றிய விவகாரம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் கூடன்குளத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications