அழகிரிக்கு அண்ணன் கடிதமே எழுதவில்லை: எஸ்.ஆர்.கோபி தம்பி தகவல்
மதுரை: எஸ்.ஆர். கோபி மத்திய அமைச்சர் அழகிரிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை உண்மையிலேயே அவர் எழுதவில்லை என்று கோபியின் தம்பி போஸ் முத்தையா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர். கோபி நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது வீடு, தோட்டத்தில் மதுரை புறநகர் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை விட முக்கியமாக மத்திய அமைச்சர் முக அழகிரிக்கு எதிரான ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரத்தி்ல் கூறப்பட்டது.
மேலும் அந்த கடிதத்தில் எஸ் ஆர். கோபி குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பு சில விஷயங்களைத் தெரிவித்துள்ளது.
அந்தக் கடிதத்தில், "என் உயிராக நினைத்து கொண்டிருக்கும் என் அண்ணன் அழகிரிக்கு... என் குடும்பமே கவுன்சிலர் லீலாவதி கொலையில் சம்பந்தப்படாமலேயே சிக்கியதால் மருதுவையும், மாமா முத்துராமலிங்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் ஒரு வெறியுடன் தங்களின் கட்டளையை செய்ய முடிந்தது.
அருப்புக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றிபெற செய்தோம். நான் பதவி கேட்கும் போதெல்லாம் நண்பர் சுரேஷ் (பொட்டு சுரேஷ்) “உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கொடுத்தாகி விட்டது என்று திரும்ப திரும்பச் சொல்வார். அப்படி பார்த்தால் தளபதியின் தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு எம்.எல்.ஏ. சீட், மாநகர் மாவட்ட செயலாளர் பதவி, துணைமேயராக இருந்த கவுஸ்பாட்சாவுக்கு எம். எல்.ஏ. சீட் அவர்களெல்லாம் உங்களுக்கு என்ன தியாகம் செய்தார்கள்.
நான் செய்த தியாகத்தில் ஒரு சதவீதமாவது விசுவாசமாக நடந்திருப்பார்களா? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன். ஆவின் சேர்மன் பதவி கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா? எனக்கு மட்டும் பதவியில் அமர ஆசை இருக்காதா? யாரையோ திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள்?," என்று கோபி கூறியுள்ளாராம்.
மேலும் அந்த கடிதத்தில் பஸ் எரிப்பு, இடைத்தேர்தல் வன்முறை, அக்னி ராஜ், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் வீடுகளில் நடந்த தாக்குதல், தா. கிருஷ்ணன் கொலை ஆகியவை பற்றி அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். "எஸ்ஆர்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. போலீசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.
இந்நிலையில் அந்த கடிதத்தை எஸ்.ஆர். கோபி எழுதவேயில்லை என்று அவரது தம்பி மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் போஸ் முத்தையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, போலீஸ் காட்டுவது பொய்க்கடிதம். என் அண்ணன் அப்படி ஒரு கடிதத்தை எழுதவேயில்லை. அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு போலீசும் உடந்தை. இந்த பொய்க்கடிதத்தை தயாரித்தவர்கள் மீதும், அதனை வெளியிட்டவர்கள் மீதும் வழக்கு தொடர்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications