தமிழகம் முழுவதும் 2,491 நில அபகரிப்பு புகார்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை 2,491 நில அபகரிப்பு புகார்கள் குவிந்துள்ளதாகவும், நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து அவற்றை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையின் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில் நடந்த நில அபகரிப்புகள் குறித்து விசாரிக்க தனி போலீஸ் பிரிவை உருவாக்கியது. இந்தப் பிரிவிடம் புகார்கள் குவிந்து வருகின்றன.
இந் நிலையில் இந்தப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர், நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு மாநிலத்தில் அமைக்கப்படுமென அறிவித்ததை தொடர்ந்து, மாவட்டங்களில் 31 நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகள், 6 மாநகரங்களான கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை புறநகரம் ஆகிய இடங்களில் 6 சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவானது, கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகரில் உள்ள காவல் ஆணையாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மாநிலத்தில் இயங்கி வருகிறது.
ஒரு துணைக் கண்காணிப்பாளர், 2 காவல் ஆய்வாளர், பிற உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களின் உதவியுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கீழ் இச்சிறப்புப் பிரிவானது ஆவணங்களை சரிபார்த்தல், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தல் மற்றும் சம்பவ இடத்திற்கு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவினை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலிருந்து சுமார் 2,491 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் நம்பிக்கை யுடனும், அச்சமின்றியும் காவல்துறையினரை அணுகி வருகின்றனர். இச்சிறப்புப் பிரிவானது முறையாக புகார்களின் உண்மை நிலையை ஆய்வு செய்தும், முழுமையாக பரிசோதனை செய்தும் குற்ற நடவடிக்கைகள் தொடர்பு சம்பந்தமான வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள உயர் அதிகாரிகள் புகார்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, தற்போது வரை சிறப்புப் பிரிவானது, 196 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவ்வழக்குகளானது பல்வேறு நிலைகளில் புலன் விசாரணையில் உள்ளது.
ஆவணங்களை கூர்மையாக ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியும், சாட்சிகளை விசாரணை செய்ததையடுத்தும், அப்பாவி மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை அச்சுறுத்தியும், ஆள் மாறாட்டம் செய்தும், ஆவணங்கள் இல்லாத நிலையிலும், போலி ஆவணங்களுடனும் அல்லது முழுமையாக பணம் செலுத்தாமலும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருந்தும், மிரட்டியும் சொத்துக்களை பலாத்காரமான முறையில் கையகப்படுத்தியுள்ளனர்.
மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் காவல்துறையினர் முறையாக சம்பவம் நடைபெற்ற இடங்களில் தலையிட்டு, இழந்த சொத்துக்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்க தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்களாகவும், பெண்களாகவும் விதவைகளாகவும், பிற மாநிலங்களில் பணிபுரிபவர்களாகவும், வீட்டிலிருந்து தொலை தூரத்தில் வசிப்பவர்களாகவும் உள்ளனர்.
சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்ட பின்னரும், சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தலையீட்டின் பேரிலும், 129 வழக்குகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெறப்பட்டுள்ள மொத்த 1930 புகார்களில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் பெறப்பட்டுள்ளன. நாமக்கல் (234), ஈரோடு (181), சேலம் (176), திருப்பூர் (155), கடலூர் (124), திருச்சி (99).பெறப்பட்டுள்ள மொத்த புகார்களில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் 43 வழக்குகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 வழக்குகளும் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநகரங்களில், கோவை மாநகரத்தில் 7 வழக்குகளும், சேலம் மாநகரத்தில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் மனுதாரர்கள் சமர்ப்பித்துள்ள பிற புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகின்றன. பெறப்பட்டுள்ள புகார்களில் குற்றம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிய வரும் நிலையில், சிறப்பு பிரிவானது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
புலன் விசாரணை அதிகாரிக்கு குற்றம் நிகழ்ந்ததென முழுமையாக தெரிய வரும் நிலையில், சிறப்புப் பிரிவானது, கீழ்க்கண்ட வழக்குகளில் சொத்துக்களை உரிய நபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆவணங்கள் ஏதுமின்றி குண்டர்கள் மற்றும் கூலிப்படையினர் துணையுடன் நிலம் அல்லது சொத்துக்களை கையகப்படுத்திக் கொள்ளுதல், ஒரு பகுதித் தொகையோ அல்லது குறைந்த அளவு பணம் கொடுத்தோ உரிமையாளரை அச்சுறுத்தி சொத்து அல்லது நிலத்தை ஆவணங்களின்றி கையகப்படுத்திக் கொள்ளுதல். இடத்தை காலி செய்யுமாறு நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டிருந்தும், சொத்து உரிமையாளர்களை அச்சுறுத்தி காலி செய்யாதிருத்தல், போலியான ஆவணங்கள் என நிபுணர் கருத்து தெரிவித்துள்ள வழக்குகள்.
எவ்வித நீதிமன்ற உத்தரவுகளும் இல்லாத நிலையில், குடியிருப்போருக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில், செல்வாக்கு உள்ள நபர்கள், குண்டர்களின் மூலமாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள்.
வழக்குகளானது,முழுமையாக உரிமையியல் தொடர்புடையது என தெரிய வந்தும், மனுதாரர்கள் அதனை குற்றப்புகார் என திரித்து கூறும்நிலையில், காவல்துறையினர் இவ்வழக்குகளில் தலையிடுவதில்லை. இது தொடர்பாக தீர்வு காண மனுதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இரு தரப்பினரிடையே சொத்து பரிமாற்றம் நடைபெற்றும், இது தொடர்பாக உரிய மதிப்பீட்டுத் தொகையும் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலத்தின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து மிரட்டுதல், அச்சுறுத்தல் மற்றும் கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக பொய்யான புகார்கள் சில தருணத்தில் அளிக்கப்படும் நிலையில், அவைகள் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு, சிறப்புப் பிரிவுகளுக்கு அனுப்பப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications