ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் சுட்டு இந்து தீவிரவாதி பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இந்து தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயர் சுபாஷ் என்று தெரிய வந்துள்ளது.
கிஷ்த்வார் என்ற இடத்தில் நடந்த என்கவுண்டரில் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவரது பெயர் ரிஸ்வான் என்று முதலில் கூறப்பட்டது. இருப்பினும் பின்னர் அவர் சுபாஷ் என்று தெரிய வந்தது.
இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரே இந்துத் தீவிரவாதி இவர் என்றும் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட சுபாஷ், பிர்பஞ்சால் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
இதுகுறித்து ராணுவ பிரிகேடியர் சீமா கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் அனைவருமே தீவிரவாதிகள்தான். தோடா மலைப் பகுதியில் நடந்த மோதலில் சுபாஷ் கொல்லப்பட்டார். உள்ளூர் மக்கள் உதவியுடன் அவரது அடையாளத்தை நாங்கள் கண்டறிந்தோம் என்றார்.
ஜம்மு காஷ்மீரில், இந்து தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications