ஈவ் டீசிங் புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ. கைது
சேலம்: ஈவ் டீசிங் புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ. பெருமாள் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி வசந்தி. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வசந்தி ஓமலூர் காவல் நிலையம் சென்று எஸ்.எஸ்.ஐ. (சிறப்பு உதவி ஆய்வாளர்) பெருமாளிடம் ஈவ் டீசிங் புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். அவள் பள்ளிக்குச் சென்று வரும்போது 4 வாலிபர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் கூறியிருந்தார்.
புகாரை வாங்கிக் கொண்ட பெருமாள் அது குறித்து நடவடிக்கை எடுக்க ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து வசந்தி சேலம் ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் சந்திர மவுலியிடம் இது குறித்து புகார் அளித்தார். உடனே அவர்கள் வசந்திக்கு ரசாயனப் பொடி தடவிய ரூ. 2 ஆயிரத்தைக் கொடுத்து அவருடன் ஒரு பெண் அதிகாரியையும் அனுப்பி வைத்தனர்.
வசந்தி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நேற்று மதியம் 3.30 மணிக்கு ஓமலூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் பெருமாளிடம் பணத்தைக் கொடுத்தார். அப்போது காவல் நிலையத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரங்கசாமி பெருமாளை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தார்.












Click it and Unblock the Notifications