அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்திற்கு 3 நாள் மட்டுமே அனுமதி- டெல்லி போலீஸ்
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மூன்று நாள் மட்டுமே டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதற்கு மேல் போராட்டத்தைத் தொடர்ந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.
ஊழலை ஒழிக்கும் வகையில் வலுவான லோக்பால் மசோதா தேவை என்று ஹஸாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ உப்புச் சப்பான லோக்பால் வரைவு மசோதாவை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ஹஸாரே குழுவினர், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் திட்டமிட்டபடி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்தது.
முதலில் இந்தப் போராட்டத்திற்கு இடம் தர டெல்லி காவல்துறை மறுத்தது. பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தது.
இந்த நிலையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை டெல்லி காவல்துறை வட்டாரம் பிறப்பித்துள்ளது. 72 மணி நேரத்திற்கு மட்டுமே அதாவது 3 நாட்கள் மட்டுமே அன்னா குழுவினர் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு மேல் போராட்டம் நீடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications