காங். தலைவர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை-அகமது படேல், ஏ.கே.அந்தோணியை அழைக்கவில்லை
டெல்லி: அன்னா ஹஸாரே கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு ராகுல் காந்தி உள்ளிட்ட சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு சோனியா காந்தியின் முக்கிய ஆதரவாளர்களான அமைச்சர்ஏ.கே.அந்தோணியும், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் அழைக்கப்படாதது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடையை மீறி இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக நேற்று அன்னா ஹஸாரே அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் காங்கிரஸ் தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் இறங்கினார். வழக்கமாக இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் மேற்கொள்வார். ஆனால் அவர் தற்போது ஊரில்இல்லாததால் பிரதமரே அந்த வேலையில் இறங்கி விட்டார்.
ராகுல் காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமைச்சர் அம்பிகா சோனி, ஜனார்த்தன் திவிவேதி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இந்த அவசர ஆலோசனை நடந்தது.
காங்கிரஸ் தலைமையகத்தில் பிரதமர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் வியப்பலைகள் பரவின. மேலும் இந்த ஆலோசனையில், சோனியா காந்தியின் முக்கிய ஆதரவுத் தலைவர்களான அகமது படேல் மற்றும் அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆலோசனைக்கு அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இருவருமே அப்போது காங்கிரஸ் தலைமையகத்தில்தான் இருந்தனர். ஆனால் பிரதமர் தனது ஆலோசனையைத் தொடங்கியபோது வெளியே நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்தோணியும், அகமது படேலும் உள்ளே போக முடியவில்லை.
பிரதமரின் இந்த திடீர் மற்றும் அதிரடி ஆலோசனையால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் வருத்தமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சரவையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியிலும் முக்கியத் தலைவர் அந்தோணி. அரசியல்விவகாரம், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கமிட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார். சோனியா காந்தியின் பிரச்சினைகளைத் தீர்க்கும் குழுவிலும் அவர் தவறாமல் இடம் பெற்றுவருகிறார். மேலும், தற்போது சோனியா காந்தி நியமித்துள்ள கட்சியைக் கவனிக்கும் நால்வர் குழுவில் அவரும் ஒருவர். அதேபோல அகமது படேல், சோனியாவின் அரசியல் ஆலோசகர் ஆவார். எனவே இவர்களை பிரதமர் ஆலோசனைக்கு அழைக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications