சுனாமி வீடுகள் ஊழல்: புதுவை கலெக்டர் இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2005ம் ஆண்டு சுனாமி வீடுகள் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அம் மாநில கலெக்டர் ராகேஷ் சந்திரா இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
சுனாமி வீடுகள் கட்ட சுனாமி புனர்வாழ்வு திட்ட அமலாக்க முகமை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் திட்ட இயக்குனராக ராகேஷ் சந்திராவிடம் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த வீடுகள் கட்டியதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. ராகேஷ் சந்திராவிடம் கடந்த 5ம் தேதி அதிகாரிகள் நேரிலும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ராகேஷ் சந்திரா புதுவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார்.
இதைத் தொடர்ந்து அவர் 5 நாட்களுக்குள் நேரில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் ராகேஷ் சந்திரா நேற்று மாலை நீதிபதி ராமசாமி முன் சரணைடைந்தார்.
அப்போது அவருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதில், 20ம் தேதி முதல் 10 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ராகேஷ் சந்திரா இன்று சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications