பத்மநாப சுவாமி கோவில் விவகாரம்: அச்சுதானந்தன் பேச்சுக்கு கேரள அரசு கண்டனம்
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்களை மன்னர் திருடிச் சென்றதாக கேரள எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறியதற்கு அம்மாநில அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பி என்ற கடைசி அறை திறக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே மன்னர் குடும்பம் சார்பில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் கடைசி அறையைத் திறந்தால் நாட்டுக்கு ஆபத்து என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அறையை திறக்க தடை விதிக்கக் கோரி மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கேரள எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் ஒரு அதிரடி குற்றச்சாட்டை கூறினார்.
அவர் கூறியதாவது,
உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தடுப்பதற்காக தான் மன்னர் குடும்பம் சார்பில் கோவிலில் தேவபிரசன்னம் நடத்தப்பட்டது. பொக்கிஷங்களை மதிப்பிடக் கூடாது என்றும், பி அறையை திறந்தால் திறப்பவர்கள் வம்சமே அழியும் என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தை மிரட்டியுள்ளனர். இதற்கு முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் பி அறை திறக்கப்பட்டுள்ளது. அப்போது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
உத்திராடம் திருநாளன்று மார்த்தாண்ட வர்மா பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பும்போது ஒரு வாளியில் கோவில் பாயாசம் எடுத்து செல்வார். அதில் பாயாசம் இருப்பதாகத் தான் அனைவரும் கருதினர். உண்மையில் அந்த வாளியில் கோவில் பொக்கிஷங்களை எடுத்துச் சென்றுள்ளார்.
இதை தடுத்த பூசாரி மீது வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விஷயத்தை பூசாரியே என்னிடம் கூறியுள்ளார். இவ்வாறு அச்சுதானந்தன் கூறியதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கேரள கிராம வளர்ச்சி துறை அமைச்சர் ஜோசப் கூறுகையில், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு எதிராக அச்சுதானந்தன் கூறிய கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. அச்சுதானந்தன் தான் கூறியதை வாபஸ் பெற்று கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அச்சுதானந்தனின் கருத்தா அல்லது மார்க்கிஸ்ட் கட்சியின் கருத்தா என்பதை அக்கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
தேவசம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவகுமார் கூறும்போது, அச்சுதானந்தன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல. கோவில் பொக்கிஷங்களை மதிப்பிடுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது கேரள அரசு சார்பில் பொதுமக்களின் கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.
என்எஸ்எஸ் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications