பேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்-லாரிகள் ஓடத் துவங்கின

டீசல் விலையை குறைத்தல், சுங்கவரி வசூலை சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த வேலைநிறுத்தத்தால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
லாரிகள் ஆங்காங்ககே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நேற்று முன்தினம் மத்திய தரைவழி போக்குவரத்து துறை லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது தோல்வி அடைந்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சக அலுவலகத்தில் அதன் செயலாளர் உபாத்தியாவுடன் நேற்று மறுபடியும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லாரி உரிமையாளர்கள் சார்பில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு தொங்கிய பேச்சுவார்த்தை மாலை தான் முடிந்தது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து கடந்த 5 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது,
லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து மத்திய தரைவழி போக்குவரத்து துறை செயலாளர் உபாத்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தி வரும் 94 சுங்கச்சாவடிகளில் அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை 50 சதவீதம் குறைக்க அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
மேலும், இன்சுரன்ஸ் பிரீமிய கட்டணம் மற்றும் டயர் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையேற்று தான் நாங்கள் லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றோம் என்றார்.
லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து நேற்று இரவு முதல் லாரிகள் இயங்கத் துவங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications